புதன், 3 ஆகஸ்ட், 2011

அடிதடிக்கு மத்தியில் கர்நாடக முதல்வராக சதானந்தா கெளடா தேர்வு!

பெங்களூர்: கர்நாடகத்தின் புதிய முதல்வராக எதியூரப்பாவின் ஆதரவாளரான சதானந்த கெளடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் பதவிக்கு ஜெகதீஷ் ஷெட்டார், சதானந்த கெளடா இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், எம்எல்ஏக்களை ஓட்டு போட்டு வைத்து கெளடாவை முதல்வராக தேர்வு செய்தது பாஜக.

சுரங்க மோசடியில் சிக்கி எதியூரப்பா தனது முதல்வர் பதவியை கடந்த 31ம் தேதி ராஜினாமா செய்தார். மேலும் தான் பரிந்துரைக்கும் நபரைத் தான் புதிய முதல்வராக்க வேண்டும் என்று பாஜக மேலிடத்திற்கு நிபந்தனை விதித்தார்.

தனக்கு வேண்டியவரான பாஜக எம்பி சதானந்த கெளடாவையே முதல்வராக்க வேண்டும் என எதியூரப்பா கூறினார். ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த கெளடா ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆனால், தனக்கு வேண்டியவரான அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டாரைத் தான் முதல்வராக்க வேண்டும் என மாநில பாஜக தலைவரான ஈஸ்வரப்பா கூறினார். எதியூரப்பாவின் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஷெட்டார், பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு வேண்டப்பட்டவர் ஆவார். ஷெட்டாருக்கு எதியூரப்பாவின் தீவிர எதிர்ப்பாளரான எம்பி அனந்த்குமாரும் ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், தன்னைத் தவிர தனது சமுதாயத்தைச் சேர்ந்த வேறு யாரும் முதல்வரானால் தனக்கு மதிப்பிருக்காது என்பதால், ஷெட்டாரை முதல்வராக்கக் கூடாது என எதியூரப்பா கூறினார். இருப்பினும் எதியூரப்பாவுக்கு பணியக் கூடாது என்ற முடிவுக்கு வந்த பாஜக தலைமை, ஷெட்டாரை முதல்வராக்க உதவுமாறு அவரிடம் பேசிப் பார்த்தது.

இது தொடர்பாக எதியூரப்பாவுடன் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, பிரதான் ஆகியோர் 3 நாட்களாக பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.

கடும் அடிதடி-கைகலப்பு:

இன்றும் இது தொடர்பாக ஜேட்லி, ராஜ்நாத் ஆகியோர் பேச்சு நடத்தியபோது, எதியூரப்பா- ஈஸ்வரப்பா ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் மூண்டது. பின்னர் தள்ளுமுள்ளாக மாறிய அந்த சண்டை, அடிதடியில் முடிந்தது. இதை ஜேட்லியும் ராஜ்நாத் சிங்கும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிலைமை எல்லை மீறிப் போகவே, எம்எல்ஏக்களையே ஓட்டு போட வைத்து முதல்வரை தேர்வு செய்ய வைக்கலாம் என்ற முடிவுக்கு பாஜக தலைவர்கள் வந்தனர். இதைத் தொடர்ந்து இன்று ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.

இதில், சதானந்த கெளடாவுக்கு 63 வாக்குகளும், ஜெகதீஷ் ஷெட்டாருக்கு 55 வாக்குகளும் கிடைத்தன. 8 வாக்குகள் வித்தியாசத்தில் கெளடா வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் முதல்வராக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

ஷெட்டார் துணை முதல்வர்?:

இந் நிலையில் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த ஷெட்டாரை துணை முதல்வராக்க அனுமதிக்குமாறு எதியூரப்பாவிடம் பாஜக தலைமை பேசி வருகிறது. இதற்கு அவர் ஒப்புக் கொண்டால், ஷெட்டார் துணை முதல்வராவார். அவருக்கு பதவி தராவிட்டால், ஈஸ்வரப்பா-அனந்த்குமார்-ஷெட்டார்-ரெட்டி கோஷ்டியால் முதல்வர் சதானந்த கெளடாவுக்கு பிரச்சனை வரலாம் என பாஜக தலைமை அஞ்சுகிறது.

6 மாதங்களில் மீண்டும் நானே முதல்வர்-எதியூரப்பா:

இந் நிலையில் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் கர்நாடக முதல்வராகப் போவதாக எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இன்னும் 6 மாதங்களில் மீண்டும் முதல்வராகப் போவதாக தெரிவித்துள்ளார்.

சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கும் எதியூரப்பாவின் கூற்று அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக் ஆயுக்தா புதிய தலைவர் ஷிவராஜ் பாட்டீல்:

இந் நிலையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷிவராஜ் வி. பாட்டீல் இன்று கர்நாடக லோக் ஆயுக்தா தலைவராக பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் பரத்வாஜ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தலைவராக இருந்த சந்தோஷ் ஹெக்டே தாக்கல் செய்த அறி்க்கையால் தான் எதியூரப்பா பதவி விலக நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை தாக்கல் செய்த ஹெக்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிந்ததையடுத்து அதன் தலைவராக பாட்டீல் பொறுப்பேற்றுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறைகள் குறித்து ஷிவராஜ் பாட்டீல் தான் விசாரணை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இவர் இருந்துள்ளார். இப்போது தேசிய மனித உரிமைக் கழகத்தின் தலைவராக (ஆக்டிங் சேர்மன்) உள்ளார்.

கருத்துகள் இல்லை: