அ.தி.மு.க. அரசின் அதிரடிக் கைதுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது தி.மு.க. வட சென்னையில் நடந்த போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார் ஸ்டாலின். 'மலைவாழ் மக்களின் வழிப் பாதையை அபகரித்து கொடநாட்டில் கொட்டம் அடிக்கும் வாய்தா ராணியே... பொய் வழக்குப் போடாதே’ என்று கோஷங்கள் போட்டார்கள். கோஷம் முடிந்ததும் மைக் பிடித்தார் ஸ்டாலின். ''கொசுத் தொல்லை, குழாயில் தண்ணீர் வரவில்லை என்றெல்லாம் சொல்லி நம்ம ஆட்சியில் வாரத்துக்கு ஒரு போராட்டத்தை ஜெயலலிதா அறிவித்தபோது, அதற்கு எல்லாம் பயந்து போகாமல் கலைஞர் அனுமதி கொடுத்தார். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பதே ஜெயலலிதா பயத்தில் இருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இதுவே நமக்கு முதல் வெற்றிதான். தி.மு.க-வை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துபோவார்கள். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். ஒரு மாணவனைப் பள்ளிக்கூடம் போகவிடாமல் தடுத்தார் என்று சொல்லி பூண்டி கலைவாணனை பாளையங்கோட்டையில் அடைத்திருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களே... அதற்காக ஜெயலலிதாவை அந்தமான் சிறையில்தான் அடைக்க வேண்டும்.'' என்று ஸ்டாலின் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. அதன் பிறகு கைது வைபவம் நடக்க... கடைசியில் கைதாகக் காத்திருந்தார் ஸ்டாலின். அப்போது,ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ''பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கை மீடியாவில்கூட போடாமல் இருட்டடிப்பு செய்தீர்களே!'' என்று கிண்டல் அடித்தார். தேசிய சேனல்கள் அவரிடம் தனித்தனியாகப் பேட்டி எடுத்தபோது டி.வி-யின் மைக்குகளைப் பார்த்து, ''என்ன டி.வி.?'' என்று விசாரித்துவிட்டுத்தான் பேட்டி கொடுத்தார். ஒரு நேஷனல் டி.வி. சேனலும் அதன் பத்திரிகையும் பெங்களூரு வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிடவில்லை என்பதால்தான் அந்தக் கோபமாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக