வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கம்பீரமான தோற்றத்துடன் சங்கிலியன் மீண்டெழுந்தான்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொய்ப்பிரசாரத்திற்கு சங்கிலியன் சிலை திறப்பு விழா தகுந்த பாடம் புகட்டியுள்ளது - மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் - புதன்கிழமை

சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் யாவும் முற்றிலும் பொய்யானவை என்பதை நேரில் பார்க்கும் போதே அறியக்கூடியதாக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான சட்டத்தரணி றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் முத்திரைச் சந்திப்பகுதியில் இன்றையதினம் (3) இடம்பெற்ற சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சிலையை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபையில் முழுமையான பங்களிப்பு இருந்து வந்தபோதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சுயலாப அரசியலுக்காகவும் சிலர் இதனை எதிர்த்தனர்.

குறிப்பாக இச்சிலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கூறப்பட்ட பல்வேறு பொய்க் காரணங்களில் ஒன்றை கூட இங்கு காணமுடியவில்லை.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும் ஒரு அரசன் எப்படி இருந்தாரோ அதே வண்ணமாக கம்பீரமான தோற்றத்துடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் இச்சிலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறக்கக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பகிஸ்கரிப்பதானது குறித்து வெட்கமும் வேதனையும் மனம் வருந்த வேண்டியுள்ளது என்றும் அவ்வாறான பகிஸ்கரிப்பானது அமைச்சர் அவர்களை நேசிக்கும் மூன்றிலிரண்டு மக்களை புண்படுத்தும் செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சட்டத்தரணிகள் பலர் இருந்த போதிலும் தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் பேராளிகளை விடுதலை செய்வது தொடர்பில் அவர்களது பங்கு எவ்வளவு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியதுடன் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய நிலையில் மக்களை பிழையான திசையில் வழிநடத்தும் உதயன் போன்ற பத்திரிகைகள் மூலமாக கடந்த காலங்களில் மக்கள் இழப்புக்களையும் துன்ப துயரங்களை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

எனவே உதயன் போன்ற பத்திரிகைகள் சங்கிலியன் சிலை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்வது போலல்லாமல் இனிவரும் காலங்களில் உண்மைச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும் எனவும் எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் அடையாளங்களையும் பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் என்னுடைய பூரண ஆதரவு கிடைக்கு மெனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: