வியாழன், 5 ஆகஸ்ட், 2010

TNA னர் அறுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிவருகின்றனர் : முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்!

அறுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசிவருகின்றனர் : முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்!

 
அறுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசிவருகின்றனர். இது காலத்தினையுணர்ந்த செயற்பாடல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
”நிலம் பறிபோவது பற்றியும், குடியேற்றம் பற்றியும் சிலர் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதால் ஏதாவது நடந்திருக்கிறதா? அதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனவா?” என்று கேள்வி எழுப்பினார்.
“மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றுவதே அரசியல்வாதிகளது கடமையாக இருக்க வேண்டிய சூழலில், தேசியம் பேசுவதும் வீண் பேச்சுப் பேசுவதும் எதனையும் தந்துவிடப் போவதில்லை.
சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திடமிருந்து பெறக் கூடியவற்றைப் பெற்றுக்கொள்வதுதான் இப்போது தேவையாகும். பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவதைப்போல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தலைகீழாக நின்றாலும் இணைக்கப்படப் போவதில்லை. அவ்வாறு இணைப்பதாக இருந்தாலும் கிழக்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால் முஸ்லிம்களும் சிங்களவர்களும் எதிர்த்துத்தான் வாக்களிப்பார்கள்.
முஸ்லிம்களுடன் பேசிவருகிறோம் என்று கூட்டமைப்பு கூறுகிறது. கல்முனை நகர சபையில் பெரும்பான்மையான ஆதிக்கம் முஸ்லிம் காங்கிரஸிடமும் கூட்டமைப்பிடமும் உள்ளன.
அங்கு ஏற்பட்ட வர்த்தக நிலையத் தகராறைக்கூட அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் உதவுவார்கள் என நம்பமுடியும். எம்மால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் செய்வோம்” என்றார்.

கருத்துகள் இல்லை: