செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நெடுந்தீவு படகு மூன்று மாதத்துக்குள் உடைந்து நீரில் மூழ்கியது

நெடுந்தீவுச் சங்கத்துக்கு வழங்கப்பட்ட புதிய படகு மூன்று மாதத்துக்குள் உடைந்து நீரில் மூழ்கியது! பழைய படகே புதிதாக மெருகூட்டப்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டு
நெடுந்தீவு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பயன்பாட்டுக்கென நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட படகான "உதயதாரகை' பாவனைக்கு உதவாத பழைய படகே என்று நெடுந்தீவு மக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். செயலகத்தின் அனுமதிக் கடிதம் மூலம் நீர்கொழும்பு வி.ஜே.யாட்டில் இருந்து இந்தப் படகு நெடுந்தீவு ப.நோ. கூ. சங்கத்துக்குக் கிடைத்தது. பயணிகள் சேவைக்காக இந்தப் படகு பெறப்பட்டபோதும் அந்தச் சேவைக்கு  உகந்ததாக அது இருக்கவில்லை.  பொருள்களை ஏற்றி இறக்கவும் அது பொருத்தமாக இல்லை. இந்நிலையில் பொருள்களை ஏற்றி இறக்கும் சேவையில் அது ஈடுபடுத்தப்பட்டது. கடந்த மாதம் 13ஆம் திகதி சிமெந்துப் பைகளை ஏற்றியபடி துறைமுகத்தில் தரித்து நின்ற படகின் அடித்தளம் உடைந்து நீரில் மூழ்கியது. இதனால் 237 சிமெந்துப் பைகள் நீரில் நனைந்து பாவனைக்கு உதவாதவையாகின. 78 லட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தப் படகு புதிய படகல்லவென்றும், இப்படகு வி.ஜே. யாட்டில் நீண்டகாலமாக மீன்பிடிப் படகாக சேவையாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இந்தப் பழையபடகு புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு, மெருகூட்டப்பட்டு வழங்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. படகு பெறப்பட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் அடித்தளத்தில் "கலாட்டி'கள் பிடித்திருப்பதாகவும் புதிய படகுகளில் இது காணப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கி சேதமடைந்த இந்தப் படகினை தற்போது வி.ஜே. நிறுவனப்பிரதிநிதிகளும் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.  

கருத்துகள் இல்லை: