வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கட்டப்பட்ட அதிகாரி தலைமறைவு? குடும்பத்தினர் கடும் அச்சத்தில்


களனியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவினால் மரத்துடன் கட்டி வைக்கப்பட்ட சமுர்த்தி அதிகாரியின் குடும்பம் தமது உயிருக்கு அஞ்சுவதாக கூறியுள்ளது. அதேசமயம், அந்த அதிகாரி தற்போது ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமுர்த்தி அதிகாரியின் உறவினர்கள் ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தளத்துக்கு இது தொடர்பாகத் தெரிவித்துள்ளனர். சமுர்த்தி அதிகாரி செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டதாகவும் அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி தமக்குத் தெரியாதெனவும் கூறியுள்ளனர். அவருக்கு நேர்ந்தது தொடர்பாக அவர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். பிரதியமைச்சரால் இந்த மாதிரியாக நடத்தப்படுவதற்கு அவர் எந்தவொரு பாவத்தையும் செய்திருக்கவில்லை. இப்போது எமது வாழ்க்கை தொடர்பாக நாம் பீதியடைந்துள்ளோம் என்று உறவினரொருவர் கூறியுள்ளார். நாங்கள் வீட்டுக்கு வெளியே வர முடியாது. ஏனெனில் ஆட்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தொலைபேசி அழைப்புகள் வரும் என்பதற்காக நாங்கள் இணைப்பைத் துண்டித்துவிட்டோம். இதனால் நாங்கள் யாவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து எமக்குத் தெரியாது என்று அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து கூறுகையில்; இது மிகவும் குரூரத்தனமான செயற்பாடெனத் தெரிவித்துள்ளனர். இந்த அரச அதிகாரிக்கு எதிரான உடல்,உள ரீதியான வன்முறையை கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சித்திரவதை மற்றும் கொடுமை என்பவற்றிலிருந்து சுதந்திரமான முறையில் இருப்பதற்கான பொதுமகன் ஒருவரின் உரிமை மீறப்பட்டதாகத் தெரிகிறது. மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவான அல்லது தண்டனை மற்றும் எந்தவொரு பாரபட்சமின்றியும் தொழில் புரிவதற்கான உரிமை என்பவை சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களிலும் ஏற்பாடுகளிலும் விதந்துரைக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.
___________________________________________________________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை: