செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நண்பரின் வீட்டில் தங்கிய பெண் தங்க நகைகளுடன் தலைமறைவு என புகார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீண்ட காலத்துக்கு முற்பட்ட தனது நண்பர் ஒருரின் வீட்டில் வந்து தங்கிய பெண்ணொருவர் அங்கிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், அரசடிவீதி, மானிப்பாய் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து  பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் மானிப்பாய், அரசடி வீதியில் உள்ள நீண்ட நாள்களுக்கு முன்னர் பழக்கமான குறித்த நண்பரது வீட்டுக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் அன்று நள்ளிரவு அந்த வீட்டில் இருந்து நகைகளைத் திருடிக் கொண்டு வெளியேறியுள்ளார்.
அவர் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கிருந்த இளைஞர்களிடம், தனது குழந்தைக்கு சுகயீனமாக உள்ளதால் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாகக் கூறி, அவர்களின் உதவியுடன் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளார்.
இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்டவரின் வவுனியாவில் உள்ள உறவினர்களிடம் விசாரித்ததாகவும் இது தொடர்பாகத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: