செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

வனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாக வேதாந்தா மற்றும் போஸ்கோ நிறுவனங்கள்

புதுடில்லி : "வனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாக வேதாந்தா மற்றும் போஸ்கோ நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு ஆராயப்பட்டு வருகிறது' என்று, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ஒரிசாவில் சுரங்கப் பணி மேற்கொண்டு வரும் வேதாந்தா நிறுவனம், வனப் பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை மீறி செயல்படுவது குறித்து நான்கு பேர் கொண்ட கமிட்டி ஒன்று ஆராய்ந்து வருகிறது. வனம் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் அந்நிறுவனம் இரும்புத் தாது எடுத்து வருகிறது. வனப் பகுதியில் இரும்புத் தாது எடுக்க அமைச்சகம் அனுமதி கொடுத்த பின்தான் வனம் அல்லாத பகுதியிலும் இரும்புத் தாது எடுக்க அனுமதி கிடைக்கும். நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கொரிய நாட்டு நிறுவனமான போஸ்கோவின் சுரங்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தல் தொடர்பான விதிமீறல்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு விதிமீறலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. கர்நாடகத்தின் சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எஸ்.பி., மினரல்ஸ், டிரிடன்ட் மினரல்ஸ், வீயெம் மினரல்ஸ் நிறுவனங்கள் விதிமீறலில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. அவற்றின் சுரங்கப்பணி தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எடியூரப்பா, வனப்

பாதுகாப்புச் சட்டம் 1980ன் விதிகள் நடவடிக்கை எடுக்கப் போதுமான அதிகாரங்களை அளிக்க வகையற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1950லிருந்து 1980 வரையிலான 30 ஆண்டுகளில் 40 லட்சம் எக்டேர் வனப் பகுதிகள், அழிக்கப்பட்டு வனமல்லாத பிற பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 30 ஆண்டுகளில் 10லட்சம் எக்டேர் வனப் பகுதிகள் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத சுரங்கத் தொழிலைத் தடுப்பதற்கான போதுமான வழிமுறைகள், தற்போதைய வனப் பாதுகாப்புச் சட்டத்தில் இல்லை. ஓபுலாபுரம் சுரங்க விவகாரத்தில், இந்திய சர்வே துறையினர், சர்ச்சைக்குரிய இடங்களை சர்வே செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இதற்கிடையில், கோவா மாநிலத்தில், ஆறுகள், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் அருகில் தான் மாநிலத்தின் பாதிக்கு மேற்பட்ட சுரங்கப் பணிகள் நடப்பதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிலிப் ரோட்ரிகஸ் மாநில சட்டசபையில் நேற்று தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 300 சுரங்க குத்தகைகளில், 182 குத்தகைகள் ஆறுகள், குளங்கள் அருகில் இயங்கி வருகின்றன. நீர்வளப் பாதுகாப்புச் சட்டத்தின் வரையறைக்குள் சுரங்கப் பணிகள் வராததால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: