வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஹைதராபாத், ஆக.5: கோயில்களைக் காக்கும் போராட்டத்தை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் நடைபெறும் ஊழலை எதிர்த்து இம்மாதம் 7-ம் தேதி தர்னா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் பாப்ளி அணையிலிருந்து அதிக நீரை உறிஞ்சுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது கோயில்களை பாதுகாக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் உள்ள கோயில்களைக் காக்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும், திருமலை திருப்பதியின் புனிதத் தன்மையை மீட்டெடுக்க போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகஸ்ட் 7-ம் தேதி திருப்பதி செல்லும் சந்திரபாபு நாயுடு, அங்குள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்பு 20 ஆயிரம் தொண்டர்களுடன் தர்னா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். பின்னர் தனது தொண்டர்களுடன் அலிபிரியிலிருந்து நடந்தே திருமலைக்குச் சென்று அங்கு கடவுளை வழிபட திட்டமிட்டுள்ளார். ஊழல் நிர்வாகத்தை அகற்ற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக நடந்தே திருமலைக்குச் சென்று சாமியை வழிபடப் போவதாக அவர் தெரிவித்தார். மாணவராக இருந்தபோது நடந்தே மலைக்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார். முன்னெப்போதும் இல்லாத வகையில் திருமலையின் புனிதம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சீர்கெட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெறுகிறது. பல கோடி பக்தர்களின் மத ரீதியான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கோவில் நிர்வாகம் உள்ளது. ஆந்திர அரசு உடனடியாக இதில் தலையிட்டு மதுபான தொழிலதிபர் டி.கே. ஆதிகேசவலு தலைமையில் செயல்படும் திருப்பதி தேவஸ்தான வாரியத்தைக் கலைத்துவிட்டு, புதிய குழுவை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை: