செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

பழனியில் சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள்


கரடிக் கூட்டம் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியக் குறியீடுகள். (வலது) 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள்.
 
பழனி, ஆக. 1: பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம். இங்குள்ள கரடிக்கூட்டம் மலையில், கிழக்கு முகமாக உள்ள வழுக்குப் பாறையின் மேலே மூன்று குகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, தண்டபாணி என்பவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்த தகவல்கள்: இவற்றை பாறை ஓவியம் என்பதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே சரியானது. இரண்டு குறியீடுகளும் வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுரமாக 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரத்தில் உள்ளது. வலதுபுறக் குறியீடு சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ளது. இதன் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை எதற்காக வரையப்பட்டது என்பது தெரியவில்லை. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளது. சிந்து சமவெளி அகழாய்வில் 417 குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் விவரம் முழுமையாகத் தெரியவில்லை. தற்போதுள்ள குறியீட்டில் வலதுபுறம் உள்ளது சிந்து சமவெளி குறியீட்டின் 240-வது வடிவத்தையும், இடதுபுறம் உள்ளது 247-வது குறியீட்டையும் ஒத்துள்ளது. இதேபோல குறியீடுகள் தர்மபுரி மாவட்டம் ஓதிக்குப்பம், பாபநத்தம் மற்றும் ஆண்டிமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அதேபோல மதுரை அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழந்தமிழ் பிராமி கல்வெட்டிலும் இறுதியில் இக்குறியீடு உள்ளது. சங்க கால தமிழ் மக்கள் இவற்றை எதற்காக பயன்படுத்தினர் என்பது புரியவில்லை. இவற்றில் வலதுபுறம் உள்ளதை இடம் அல்லது மனை என்றும், காலம் அல்லது பொழுது என்றும் படித்துள்ளனர். இடதுபுறம் உள்ளதை வீடாக குறித்துள்ளனர் பலர். இவற்றின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம், தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாகும் என்பது தெரியவருகிறது. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைப் பல்லாங்குழிகள் இந்த மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை உள்ளது. பெருவழிப்பாதை என்பது பழங்காலத்தில் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தப்பட்ட பாதையாகும். பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பாறைப் பல்லாங்குழிகள் உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரியும் நிலையில், மற்ற இரண்டு பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த பெருவழிப்பாதை வணிகர்கள் குகையில் தங்கும் போது பொழுது போக்க பயன்படுத்தியிருக்கலாம். பல்லாங்குழி விளையாட்டு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, ஜிம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: