வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

வைகோ,திருவிழா கூட்டத்தில் பெற்றோரை தொலைத்த குழந்தை போல

வைகோ கண்ட பலன் என்ன?
ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டுமெனில், லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில், குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. இதில் 6 சதவீத ஓட்டு கூட பெற முடியாத ம.தி.மு.க., மற்றும் புதுச்சேரி பா.ம.க., போன்ற கட்சிகள், மாநில அந்தஸ்தையும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி, மாநில மற்றும் தேசியக் கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. கட்சி நடத்துபவருக்கு, தன் கட்சிக்கு அந்தஸ்தை பெற்றுத் தரக்கூடிய தகுதி கூட இல்லை எனில், அவருக்கு தலைவர் பதவி எதுக்கு? அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்த புதுச்சேரி பா.ம.க.,வை, ராமதாஸ் கலைத்து விடலாமே! பீகார், ஜார்க்கண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில், மாநில கட்சியாக அங்கீகாரம் மற்றும் தேசிய கட்சி அங்கீகாரத்தையும் இழந்துள்ளார் லாலு பிரசாத் யாதவ். இவரும் கட்சியை கலைத்துவிட்டு, வேளாண்மை பண்ணை என்று பார்க்க போகலாமே! மக்களாவது கொஞ்சம் நிம்மதியாக இருப்பர். இதில், வைகோ நிலைமை தான் பரிதாபம். அவருடைய தொண்டர்கள், என்ன செய்வது, ஏது செய்வது என புரியாமல், திருவிழா கூட்டத்தில் பெற்றோரை தொலைத்த குழந்தை போல தவிப்பர். இதில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தும், 6 சதவீத ஓட்டுக்கூட பெற முடியாமல் போனது வேடிக்கை தான். இந்த லட்சணத்தில், "அடுத்த தேர்தலில், ம.தி.மு.க., சிறப்பான வெற்றி பெற்று, இழந்த அங்கீகாரத்தை மீண்டும் பெறும்' என்கிறார். எப்படி முடியும்? ஜெயலலிதா இவரை கருவேப்பிலை மாதிரி அல்லவா பயன்படுத்துகிறார். மேடைதோறும் சிங்கம் போல சீறி கர்ஜித்து, இதுவரை அவர் கண்ட பலன் தான் என்ன? அவருடைய தொண்டர்கள் தான் என்ன பயனடைந்து விட்டனர். வைகோவும், அவரது கட்சியினரும், சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: