புதன், 4 ஆகஸ்ட், 2010

புலிகளின் சொத்துக்களை சுவிகரிக்க அரசு முடிவ

கொழும்பு பிரதேசத்திலுள்ள புலிகளின் சொத்துக்களை சுவிகரிக்க அரசு முடிவு

கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் புலிகள் இயக்கம் அமைத்துவரும் வீடுகள் வியாபார நிலையங்கள் காணிகள் மற்றும் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் என்பவற்றை அரசாங்கம் சுவிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன கூறினார்.கடந்த ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்த 723 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவசர கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது:- 30 வருட பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்பட்டு நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நிரந்தர சுதந்திரமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சில சட்ட நிலைமைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.
கைதான புலி உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த மக்கள், புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி புலிகள் மறைத்து வைத்திருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இது தவிர இந்தத் தகவல்களின் அடிப்படையில் புலி உறுப்பினர்களை அடையாளங் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்த 723 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவசர காலச் சட்டத்தின் கீழ் புலி உறுப்பினர்கள் உட்பட 765 பேர் கைதானதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 74 பேர் கைது செய்யப் பட்டனர். கைதான புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் படி கொழும்பிலும் அண்டிய பகுதிகளிலும் புலிகள் அமைத்துள்ள வீடுகள், காணிகள் பல்வேறுபட்ட வியாபார நிலையங்கள் புலிகளின் சொத்துக்கள் என்பவற்றை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு உதவி வழங்கிய கனடா அரச சார்பற்ற நிறுவனமொன்றை அந்த நாடு தடை செய்துள்ளது. புலிகளுக்கு உதவிய நபர் ஒருவருக்கு தென் இந்தியாவில் ஒரு வருடசிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாம் பெற்ற சுதந்திரத்தை நிரந்த சமாதானமாக மாற்றுவதற்கு அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டியுள்ளது.சிலர் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால் எமது நாட்டு நலன்களைப் பாதுகாக்க வேண்டியது சகல எம். பி. க்களின் பொறுப்பாகும்.

கருத்துகள் இல்லை: