டெல்லி: வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் அனைத்து
ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு செல்போன் வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் 60 லட்சம் குடும்பங்களுக்கு இலவச செல்போன்கள் தரப்படவுள்ளன. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் இந்த திட்டத்தை அறிவிக்க உள்ளார்.
`ஒவ்வொரு மனிதருக்கும் செல்போன்' என்ற இந்த திட்டத்தின் கீழ் வெறும் செல்போன் மட்டுமல்லாமல், 200 நிமிடங்கள் இலவச டாக் டைமும் அளிக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திட்டக் குழு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சத்துடன், பிரதமர் அலுவலகம் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்து வருகிறது.
இந்த இலவச டாக் டைம் காரணமாக மாதத்துக்கு ஒரு செல்போனுக்கு ரூ.100 வரை செலவாகும் என்று அரசின் திட்ட மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையை வழங்க முன் வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன.
2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை குறி வைத்து இந்தத் திட்டத்தை மத்திய அரசு அமலாக்க உள்ளதாகத் தெரிகிறது.
திட்டக் கமிஷனின் கணக்குப்படி நகர்ப் பகுதிகளில் ஒரு நாளைக்கு ரூ. 28.65 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளவரும், கிராமப் பகுதிகளில் ரூ. 22.42 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளவரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக