புதன், 8 ஆகஸ்ட், 2012

ஈமு கோழி Faud.. சத்தியராஜ், சரத்குமார், பாக்கியராஜ், பார்த்திபன்

ஈரோடு: நடிகர்களை வைத்து கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்த ஈமு கோழி நிறுவனங்கள் ஊக்கத் தொகை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பணத்தை திரும்ப தர வலியுறுத்தி ஈமு கோழி நிறுவனத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
‘கோழி வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம்'.. இது ஈமு கோழி நிறுவனங்கள் சொல்லும் தாரக மந்திரம். பிரபல திரைப்பட நடிகர்கள் சத்தியராஜ், சரத்குமார், பாக்கியராஜ், பார்த்திபன் தொடங்கி பரவை முனியம்மா வரை ஈமு கோழி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
உள்ளூர் சேனல் வரை உலகச் சேனல் வரை ஈமு கோழி நிறுவனத்தின் இந்த பித்தலாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. அதனை உண்மை என்று நம்பிய அப்பாவி விவசாயிகள் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பட்டை  நாமத்தை சாத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர் பலர். இதனால் ஈமு கோழிகளை வளர்க்கும் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

முதலீட்டாளர்கள் முற்றுகை:

பெருந்துறையில் உள்ள சுசி ஈமுக்கோழி பண்ணை நிறுவனம் இதுபோன்ற புகாரில் சிக்கியுள்ளது. சுசி ஈமு ருசி ஈமு என்ற ஹோட்டல்களை பல்வேறு நகரங்களில் தொடங்கியுள்ள இந்த நிறுவனம் ஈமு கோழி பண்ணை அமைக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய்களை வாங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தினர் அளித்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கர்நாடகம், டெல்லி மாநிலங்களில் இருந்தும் சுமார் 12,000 பேர் இந் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தலா ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்த பணத்துக்கு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையும், ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் கடந்த இரு மாதங்களாக ஊக்கத்தொகை வழங்காத காரணத்தினால் அதிருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் பெருந்துறையில் உள்ள சுசி ஈமு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். ஆனால், இங்கு நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ளவர் யாரும் இல்லை என்பதால் முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதலீட்டளர்கள் இந்நிறுவன நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டபோது செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள ஊழியர்களுக்கும் பண விவரம் பற்றி ஏதும் தெரியவில்லை.
இந்நிலையில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் 1,000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை முற்றுகையிட்டனர். மாதந்தோறும் 10,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை நம்பித்தான் இதில் முதலீடு செய்தோம் இப்போது முதலுக்கே மோசமாகிவிட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் கூறினர்.
நிர்வாக அதிகரிகள் மீது வழக்குப்பதிவு:
இந் நிலையில் முதலீட்டாளர்களை போலீசார், தனியார் திருமண மண்டபத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து அவர்களிடம் புகார் மனுக்களைப் பெற்றனர்.
வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சுசி ஈமுக்கோழி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.குரு உள்பட 8 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொத்துக்கள் முடக்கம்:
இதனிடையே சுசி ஈமுக் கோழி பண்ணை நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் 12,000 பேர் முதலீடு செய்த ரூ. 200 கோடி பணம் என்ன ஆனது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நிர்வாக இயக்குநரின் பாஸ்போர்ட் மற்றும் சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்கள், இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஆகியவற்றை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்த நிலங்களையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோழி தீவனத்திற்கு பாக்கி...
இந்த ஈமுக் கோழி பண்ணை நிறுவனம் சார்பில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 75,000 ஈமுக் கோழிகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெருந்துறையில் மட்டும் 5,000 கோழிகள் உள்ளன. இவற்றுக்கான தீவனத்தை திண்டுக்கல்லைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் விநியோகம் செய்து வந்துள்ளார்.
இப்போது அவருக்கு ரூ.4 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதால் அவரும் தீவனம் வழங்குவதை நிறுத்திவிட்டார். தற்போது இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் வராததாலும், முதலீட்டாளர்கள் நலன் கருதியும், இந்நிறுவனத்தின் சொத்துகள், கோழிகள் உள்ளிட்டவை தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஒரு கோழிக்கு தினசரி சராசரியாக 750 கிராம் தீவனம் தேவைப்படுகிறது. ஆனால், தீவனம் அறவே இல்லை. இந்தக் கோழிகளின் இறைச்சியை வாங்கவும் யாரும் முன்வருவதில்லை. இதனால் இந்த ஈமுக் கோழிகளை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகின்றனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதே நம் ஊர் வழக்கம். அது எந்த ஊழலாக இருந்தாலும் சரி. அதற்கு ஈமுக் கோழியும் தப்பவில்லை

கருத்துகள் இல்லை: