ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

உண்ணாவிரதம்.. காந்தியால் பிரபலபடுத்தப்பட்ட அநாகரீகம்.அன்னா அசாரே, மோடி.


அன்னா அசாரே, மோடி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்?
-க. மதிவாணன், திருநெல்வேலி.
வறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகும் நாட்டில், உண்ணாவிரதத்தை ஒரு   போராட்டமாக கடைப்பிடிப்பது எவ்வளவு மோசடியானது.
சோத்துக்கு வழியில்லாமல் சுருண்டு சாகுற சோமாலியா மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தினமும் தின்று கொழிக்கிற ஒருவன், ‘உண்ணாவிரத போராட்டம்’ என்று அறிவித்தால் அவனை எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள். அதுபோல்தான் இந்தியாவிலும் உண்ணாவிரதத்தை பார்க்க வேண்டும்.
ஆனாலும், காந்தியால் பிரபலபடுத்தப்பட்ட இந்த அநாகரீகம், உண்ணாவிரதத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களையும், வேறு வழியில்லாமல் உண்ணாவிரத முறைக்கு தள்ளியிருக்கிறது.
சமீபத்தில் மூவரின் தூக்கிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள், உண்ணாமல் சுருண்டு கிடந்தார்கள்.
அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மீனவர்கள், மயக்கமாகி கிடந்தார்கள்.
ஆனாலும், அந்தக் காலத்து காந்தியிலிருந்து, இந்தக் காலத்து அன்னா அசாரே, மோடி வரை, ஒரு வேளைக்கு இரண்டு FULL MEALS சாப்பிட்டா மாதிரி, உற்சாகமா உண்ணாவிரதம் இருக்கிறார்களே எப்படி? சைடுல எதாவது சப்ளை ஆவுதோ என்ன கர்மமோ?
அன்னா அசாரே மாதிரி காந்தியவாதிகள், ‘ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தாலும் உற்சாகமாக இருப்பது எப்படி?’ ‘காந்தி பாணி உண்ணாவிரதம் – வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’
இது போன்ற புத்தகங்களையும், உண்ணாவிரத ட்ரைனிங் சென்டர்களையும் ஆரம்பித்தால், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நம்மளும் போய் கத்துக்கணுங்க.
ஏன்னா எதிர்காலத்துல உண்ணாவிரதம் முக்கியமான உபசரிப்பாகவும், பொழுது போக்கு அம்சமாகவும் மாறிடும்.
“ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து கண்டிப்பா ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கனும். மறந்துடாதீ்ங்க, நிச்சயம் வரணும்”
“என்னங்க இந்த லீவுக்கு நீங்க பசங்கல கூட்டிக்கிட்டு சுற்றுலா போறிங்களா? இல்ல உண்ணாவிரதம் இருக்கப் போறிங்களா?”
www.mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: