செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மதுரை கிரானைட் முறைகேடு: மு.க. அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு

 Granite Smuggling Dayanidhi Azhagiri Booked
 அரசு குவாரியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததற்காக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கை அளி்த்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்த 2 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார் தற்போதைய மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டிச் செல்லும் வரை அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் சுப்புராஜ்,செல்வராஜ் ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிரானைட் நிறுவனங்களி்ல் நேற்று ஆய்வு நடந்தது. அப்போது சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள டோட்டல் ஸ்டேஷன் என்ற கருவியை வைத்து கிரானைட் கற்கள் எந்த அகலம், நீளம், ஆழத்தில் வெட்டி எடுக்கப்பட்டன என்று கணக்கிடப்பட்டது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கீழவளவு கிராம நிர்வாக அதிகார் பார்த்திபன் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் அம்மன் கோவில்பட்டி சர்க்கரைபீர் மலை அருகே அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான குவாரியில் 1,823.571 கனமீட்டர் அளவு கிரானைட் வெட்டி எடுத்ததற்காக ஒலிம்பஸ் குவாரி நிறுவன அதிபர் நாகராஜ், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிரானைட் கடத்தல் குறித்து கிராம நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் பி.ஆர்.பி. நிறுவனம், ஓம்ஸ்ரீஓம் கிரானைட் நிறுவனம், தீபா இம்பெக்ஸ் லிமிடெட் கிரானைட் நிறுவனம், சிந்து கிரானைட் நிறுவனம், பாரதியார்புரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி அம்பலம் மகன் பெரியசாமி, மேலூர் பன்னீர் முகம்மது, மேலூர் இப்ராகிம் சேட், ராஜபாளையம் ஏ.பி.முருகன் உள்பட மொத்தம் கிரானைட் குவாரி அதிபர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: