வியாழன், 9 ஆகஸ்ட், 2012

HIgh Court:குழந்தையின் கனவை தகர்த்தவர்கள் அப்பாவிகளா?

சென்னை: பள்ளி பேருந்து ஓட்டை வழியே சிறுமி விழுந்து பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, பள்ளியின் தாளாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளரின் ஜாமின் மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை, தாம்பரம் சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ருதி, கடந்த மாதம் 27ம் தேதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து, உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானாள்.
ஜாமினுக்கு எதிர்ப்பு: இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் சீமான், கான்ட்ராக்டர் யோகேஷ், பள்ளி தாளாளர் விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தாளாளர் விஜயன், ஆய்வாளர் ராஜசேகரனின் ஜாமின் மனுக்களை, செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதி அக்பர் அலி விசாரித்தார். ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் வாதாடினர்.


நீதிபதி அக்பர்அலி பிறப்பித்த உத்தரவு: வழக்கு டைரியில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும் போது, ஏழு வயது சிறுமி விழும் அளவுக்கு, பெரிய அளவில் ஓட்டை உள்ளது தெரிகிறது. ஓட்டையின் முனைகளும், மேற்பரப்பும், பலகையால் மூடப்பட்டுள்ளது. பேருந்து நகரும் போது, அந்தப் பலகையும் நகர்ந்துள்ளதால், அந்த ஓட்டை வழியாக, சிறுமி கீழே விழுந்துஉள்ளார்.

உரிமையாளர் பொறுப்பு: அந்த பேருந்தில் பயணித்த இரண்டு பெற்றோர், ஓட்டைப் பற்றி, ஓட்டுனர், கிளீனர் மற்றும் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என, மனுதாரர்கள் கூற முடியாது. வாகன உரிமையாளர் என்ற முறையில், அந்த வாகனத்தை முறையாக பராமரிப்பதும், பஸ்சில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பராமரிப்பதும், அவரது பொறுப்பு. ஓட்டை பற்றி கவனித்தும், அந்த ஓட்டையை அப்படியே விட்டுள்ளனர். பேருந்தில் ஓட்டை இருப்பதை கவனிக்கவில்லை என, மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுவது பொய். ஓட்டையை பலகையால் அடைத்திருப்பதை பார்த்து, அதை புறக்கணித்திருக்க வேண்டும் அல்லது அந்தப் பேருந்தை ஆய்வு செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.

யார் மீது குற்றம்? இதன்மூலம், அந்த பேருந்தில் பயணிப்பதன் மூலம், உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படக் கூடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே, மனுதாரர்கள் இருவருக்கும், அஜாக்கிரதை மற்றும் அந்த செயலால் உயிரிழப்பு ஏற்படும் எனத் தெரிந்துள்ளது என்பதால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304(2) பொருந்தும். மனுதாரர்கள் வசதி படைத்தவர்கள்; செல்வாக்கு உள்ளவர்கள். சாட்சிகளை கலைக்கக் கூடும் எனக் கருதுவதற்கு காரணம் உள்ளது. குற்றத்தின் கடுமையைப் பார்க்கும் போது, எந்த தவறும் செய்யாத ஏழு வயது அப்பாவி குழந்தை உயிரிழந்துள்ளார் என்பதால், அதற்கு யார் மீது குற்றம் சொல்வது? பேருந்தில் இருந்த ஓட்டை மூலம் இறப்பு நேரிடும் என்பதை தெரிந்தவர்கள் மீது தான், குற்றம் சொல்ல முடியும்.

மனு தள்ளுபடி: மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு குழந்தை திரும்பிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் கனவுகள், அதன் பெற்றோரின் கனவுகள், நீர்க்குமிழி போல் உடைந்து விட்டது. சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளும், பொது மக்களும், அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்க மாட்டார்கள். குற்றத்தின் தன்மை இந்த அளவுக்கு கடுமையாக இருக்கும் போது, தாங்கள் அப்பாவி என, மனுதாரர்கள் கோர முடியுமா? அதற்கு விடை, "இல்லை' என்பது தான். எனவே, இந்தக் கட்டத்தில் மனுதாரர்கள் நிவாரணம் பெற உரிமை இல்லை. ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி அக்பர்அலி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: