திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கிரானைட் கடத்தல் 16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் கணக்கு

 Sagayam Reoport On Granite Scandal In Madurai Dist

கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு

சென்னை: தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட ஒருசில நிறுவனங்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மூலம் வெட்டி எடுத்ததால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அதிகமானது என்று மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மிக விரிவாக கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சட்டவிரோத கிரானைட் கடத்தல் பற்றிய சகாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

6 மாதங்களில் சுமார் 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப்பட்டு வருகிறது என்று தினபூமி நாளிதழின் ஆசிரியர் தமது புகார் மனுவில் கூறியிருந்தார். இப்புகார் எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே மேலூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோத கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 14,24, ஜனவரி 28, பிப்ரவரி 3 ஆகிய நாட்களில் இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது. தினபூமி ஆசிரியர் குறிப்பிடுவதுபோல் 6 மாதத்தில் ரூ1650 கோடி மதிப்பிலான கிரானைட் கற்ககள் கடத்தப்படவில்லை. இது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஏப்ரல் 13-ந் தேதி மேலூர் தாசில்தாரால் ஒரு கிரானைட் கல் வாகனம் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒலிம்பஸ் நிறுவனம்
தினபூமி நாளிதழ் ஆசிரியர் தமது புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களான துரை தயாநிதி, நாகராஜ் ஆகியோரின் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் கீழவளவு கிராமத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியதாக புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக கீழவளவு மற்றும் கீழையூரில் ஒலிம்பஸ், சிந்து, பி.ஆர்.பி. கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. 3 குவாரிகளில் மட்டும் ரூ23.42 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
ரூ16,338 கோடி ரூபாய் இழப்பு
இதேபோல் எஞ்சிய 91 குவாரிகளிலும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அரசின் டாமின் குவாரிகளில் இருந்து சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. மேலும் கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது
கனிம வள அதிகாரிகள் உடந்தை
பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற கிராமங்களில் கிரானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப்பட்டு உள்ளன. ஒரு காலத்தில் இதற்காகப் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர். சில நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர்.
கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர் மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வமாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சகாயம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: