சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கிறோம் என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி: துணை ஜனாதிபதி தேர்தலில்,
ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க., ஆதரிக்க இரண்டு காரணங்கள் உள் ளன. ஒன்று,
கடந்த 28 ஆண்டுகளாக ஜஸ்வந்த் சிங்குடன் எனக்கு நட்பு உள்ளது. 1984ல்
அவரும், நானும் பார்லிமென்டில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்த நீண்ட கால
நட்புக்காக அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன். இரண்டாவது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான பங்கு உள்ளது. இதில், மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என்பதற்காக, எதிர்க்கட்சி போட்டியிடாமல் இருந்துவிட முடியாது. எதிர்க்கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு ஜெயலலிதா கூறினார். முன்னதாக, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்த ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க.,வின் ஆதரவைக் கோரினார்.
இதன் பின், நிருபர்களைச் சந்தித்த அவர், ""துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான எனக்கு, ஆதரவு அளிக்கும்படி அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டேன். என்னை ஆதரிப்பதாக அவர் உறுதியளித்தார். என் வெற்றி செவ்வாய் கிழமை தெரிந்துவிடும். துணை ஜனாதிபதி தேர்தலில், நடுநிலை வகிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எடுத்துள்ள முடிவு குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை,'' என்றார்.
அமைச்சர்களுடன் ஆலோசனை: கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசின் நிர்வாகம் குறித்து அவர் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கொடநாட்டில் சில வாரங்கள் தங்கியிருந்தபடியே, அரசுப் பணிகளைக் கவனித்த வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் சென்னை திரும்பினார். சென்னை வந்த அவருக்கு, சாலைகளின் இருபுறங்களிலும் அ.தி.மு.க., கொடி மற்றும் தோரணங்களைக் கட்டி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பார்லிமென்ட் அ.தி.மு.க., தலைவர் தம்பிதுரை ஆகியோர் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களுடன் அரசின் நிர்வாகம் குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில், ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்க எடுத்துள்ள முடிவு குறித்தும், அமைச்சர்களுடன் ஆலோனை நடத்தினார் என, அ.தி. மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும் முதல்வரைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை திரும்பினார் முதல்வர்: கொடநாடு எஸ்டேட்டில் இருந்த அரசுப் பணிகளை கவனித்து வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். கொடநாடு எஸ்டேட்டில் தங்கி அரசு நிர்வாகத்தை கவனித்து வந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை 3 மணிக்கு, கோவையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை, அ.தி.மு.க., சபைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
ம.தி.மு.க., ஆதரவு: துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக, ம.தி.மு.க., அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த, 15 எம்.பி.,க்களின் ஆதரவை, ஜஸ்வந்த் சிங் பெற்றுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான ஜஸ்வந்த் சிங், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவை, சென்னையில் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து, ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதாக வைகோ அறிவித்தார். ம.தி.மு.க.,வுக்கு ஒரு எம்.பி., உள்ளார். ஜஸ்வந்த் சிங்கை, அ.தி.மு.க.,வும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க.,வுக்கு பார்லிமென்டின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், 14 உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வும்,- ம.தி.மு.க.,வும் சேர்ந்து, 15 எம்.பி.,க்களின் ஆதரவை, ஜஸ்வந்த் சிங்கிற்கு அளிக்கின்றனர்.
வெற்றி பெறுவேன்: ஜஸ்வந்த் சிங் நம்பிக்கை: ""துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கோர வந்திருக்கிறேன்,'' என்று, ஜஸ்வந்த்சிங் கூறினார்.
பா.ஜ., கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த்சிங், நேற்று மதியம், 1.40 மணிக்கு டில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை, பா.ஜ., சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில், ஜஸ்வந்த்சிங் அளித்த பேட்டி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க.,வின் ஆதரவு கோர வந்திருக்கிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு தான், ஓட்டு கேட்டு வந்துள்ளேன். காங்கிரஸ், பா.ஜ., அல்லாத ஒருவர் தான் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புள்ளது என்று, அத்வானி கூறியிருப்பதற்கு, அவர் மோடியை மனதில் வைத்து அப்படி சொன்னாரா என்று, நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதால், அரசியல் பேச விரும்பவில்லை. இவ்வாறு ஜஸ்வந்த்சிங் பேட்டியளித்தார். அவரிடம் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வும்,- அ.தி.மு.க.,வும், சங்மாவை ஆதரித்ததை போல, வரும் பார்லிமென்ட் தேர்தலிலும் கூட்டு தொடருமா என்று கேட்டதற்கு, "அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதால், அரசியல் பேச முடியாது' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக