ஓசூர்: திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து, ஓசூர் வழியாக தினமும்,
200 லாரிகளில் கர்நாடகாவுக்கு மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தல் மூலம்
கோடி கணக்கில் பணப் பரிமாற்றம் நடப்பதாலும், போலீசாருக்கு நிரந்தர
கவனிப்பும் கிடைப்பதால் கண்டுகொள்வதில்லை.
கர்நாடக மாநிலத்தில் ஆறுகள், நதிகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்
ஆதாரப் பகுதியில் மணல் வெட்டி எடுக்க, அம்மாநில பொதுப்பணித் துறை, போலீசார்
நிரந்தர தடை விதித்து, மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.ஸ்தம்பிப்பு: இதனால், அம்மாநிலத்தில் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூரு, ஆணைக்கல், சந்தாபுரம் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட அம்மாநில முக்கிய நகரங்களில் கட்டுமானத் தொழில் ஸ்தம்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத் தொழில், தற்போது, தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் மணலை முழுமையாக நம்பியுள்ளது. தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் ஒரு லாரி மணல், கர்நாடகாவில், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. மணல் கடத்தல் மூலம் கொள்ளை லாபம் கிடைப்பதால், தமிழக, கர்நாடக எல்லையோர மணல் புரோக்கர்கள், ஓசூர், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், ஆம்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் மிக பெரிய நெட் வொர்க் அமைத்து, தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக கர்நாடகாவுக்கு, 24 மணி நேரமும் மணல் கடத்துகின்றனர். தினமும் ஓசூர் வழியாக, கர்நாடகாவுக்கு தமிழக எல்லையை கடந்து, 150 முதல், 200 லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. இவற்றை தடுக்க வேண்டிய பொதுப்பணித் துறை, போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், புரோக்கர்களின் கவனிப்பால் மணல் கடத்தலை தடுக்காமல் கடத்தலுக்கு துணை போகின்றனர்.
குவிப்பு: ஆம்பூர், கரூர், திருச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்து கடத்தப்படும் மணல், ஓசூரில் விற்பனை செய்வதாக, பில் போட்டு, ஓசூர் அருகே டி.வி.எஸ்., கூட்டு ரோடு அருகே ஒரு இடத்திலும், குருபரப்பள்ளியில் ஒரு இடத்திலும், மணல் புரோக்கர்கள் குடோன் அமைத்து, ஆயிரக்கணக்கான டன் மணலை குவித்து வைக்கின்றனர். இந்த மணலை, காலை முதல் இரவு வரை கர்நாடகாவுக்கு லாரிகள் மூலம் கடத்துகின்றனர். எல்லையோர போலீசாரின், "கிரீன்' சிக்னல் கிடைத்ததும், மூன்று, நான்கு லாரிகள் சேர்ந்து, கர்நாடகாவுக்கு மொத்தமாக மணலை கடத்துகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் அனைத்து மணல் லாரிகளும், எல்லையை கடந்து கர்நாடகாவுக்கு செல்வது, சிப்காட் போலீஸ் அதிகாரி ஒருவர் கையில் தான் உள்ளது. அவர் ஒரு லாரிக்கு, 2,000 ரூபாய் வீதம் வசூல் செய்து விட்டு, மணல் லாரிகளை பாதுகாப்பாக கர்நாடகாவுக்கு அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணல் கடத்தல் மூலம் கோடிக் கணக்கில் பணப் பரிமாற்றம் நடப்பதாலும், நிரந்தர "கவனிப்பும்' கிடைப்பதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு, ஓசூர் வழியாக மணல் கடத்தல் கொடிகட்டி பறக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக