புதுச்சேரி: புதுவையில் கைதி ஜெகனை போலீஸ் வேனில் வெடிகுண்டு வீசி கொலை
செய்த வழக்கில் 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் 2004ம் ஆண்டு ரவுடி ஜெயக்குமாரை
வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் தேங்காய்திட்டு ரவுடி ஜெகன் கைது
செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 26ம்தேதி
காரைக்கால் சிறையில் இருந்தபடி தொழிலதிபர் நரேஷ் பட்டேலிடம் பணம் கேட்டு
ஜெகன் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து ஜெகனை கைது
செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக காரைக்கால் சிறையில் உள்ள ஜெகனை உருளையன்பேட்டை போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று மாலை காரைக்கால் சிறைக்கு போலீஸ் வேனில் ஜெகனை அழைத்து சென்றனர். உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன், காவலர்கள் நாகராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 போலீசார் கைதி ஜெகனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரி - கடலூர் சாலை நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் வேன் சென்றபோது கார், இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் திடீரென வேனை வழிமறித்து சரமாரி வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஜெகன் படுகாயமடைந்து இறந்தார். 5 போலீசாரும் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் சீனியர் எஸ்பி பர்வேஷ் அகமது, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளில் 5 பேரை போலீசார் நள்ளிரவு மடக்கி பிடித்துள்ளனர். அவர்கள் பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகளான வாணரப்பேட்டை அய்யப்பன், கொசப்பாளையம் அருள் உள்ளிட்ட 5 பேர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை வழக்குகளில் சிறைக்கு சென்ற ரவுடி ஜெகனுக்கும், அவரது எதிரியான மணிகண்டனுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காலாப்பட்டு சிறையில் மோதல் ஏற்பட்டது. இதில் மணிகண்டனின் கை உடைந்து ஜிப்மரில் சிகிச்சை பெற்று திரும்பினார். பாதுகாப்பு கருதி 2 பேரும் காரைக்கால் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கும் 2 பேருக்கும் மோதல் ஏற்பட்டது. ஜெகனை தீர்த்துகட்ட மணிகண்டன் முடிவு செய்துள்ளார். இதற்காக தனது கூட்டாளிகளை தயார்படுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி கோர்ட்டில் ஜெகனை ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் காரைக்கால் சிறைக்கு சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் வெடிகுண்டு வீசி ஜெகனை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக