Viru News
தி.மு.க.
எம்.பி. மற்றும் நடிகர் (?) ரித்திஷ் இனி தைரியமாக வெளியே தலைகாட்ட
முடியும், அட்லீஸ்ட், ஒரு வழக்கை பொறுத்தவரை! நில அபகரிப்பு வழக்கு ஒன்றில்
அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வழக்கை தவிர அவர்மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராமநாதபுரம்
லோக்சபா தொகுதி எம்.பி. ரித்திஷூக்கு அவரது தொகுதிக்குள் இருப்பது
விசித்திர நிலைமை! மற்றைய தி.மு.க.-வினருக்கு எதிர்க் கட்சிகளில் எதிரிகள்
அதிகம் இருந்தால், இவருக்கு அதிகம் இருப்பது வெளியே அல்ல, சொந்தக்
கட்சிக்குள்தான்.தி.மு.க.-வின் மற்றைய முக்கியஸ்தர்களை வழக்கு போட்டு உள்ளே தள்ள, ஆளும் கட்சியும், போலீஸூம் முயற்சி எடுப்பது வழக்கம். இவரது விஷயத்தில் அந்த சிக்கல்கூட யாருக்கும் கிடையாது. இவரது கட்சிக்காரர்களே, இவரை வசமாக மாட்டி விடுவார்கள்.
அந்தளவுக்கு உள்கட்சி ஜனநாயகத்தை செழிப்பாக வைத்திருப்பவர் ரித்திஷ்.
சொந்தக் கட்சிக்குள்கூட, இவருக்கு எதிராக ஆக்ஷன் எடுப்பவர்கள் யாரோ அந்நியர்கள் அல்ல. எல்லாம், குடும்பத்துக்குள்தான். இவரது தாத்தா சுப. தங்கவேலரின் ஆட்களே இவரை எப்படி வழி பண்ணலாம் என்று 24 மணி நேரமும் ரூம் போட்டு ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையிலும் மதுரையிலும் எழுப்பும் ‘கட்சியே குடும்பம், குடும்பமே கட்சி’ என்ற கோஷத்துக்கு, ராமநாதபுரத்தில் நின்று எக்கோ கொடுத்து, கட்சிப் பாரம்பரியத்தைக் காப்பாற்றும் நிஜ தி.மு.க.-காரர் ரித்திஷ்தான்.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, பாப்பன்குழியைச் சேர்ந்த பழனி என்பவர் அளித்த நில அபகரிப்பு புகாரின் பேரில், ரித்திஷ் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில்தான் ரித்திஷ், சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை நீதிபதி அக்பர்அலி விசாரித்தார். அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், “மனுதாரர் மீது 12 வழக்குகள் உள்ளன. புகார் கொடுத்தவரை மட்டுமல்லாமல், மற்றவர்களையும் ஏமாற்றும் விதத்தில் செயல்படுவதில் வல்லவர் இவர். அதனால் இவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது” என வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர்அலி, ரித்திஷூக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
“எங்கே போய்விடப் போகிறார்? மற்றொரு கேஸில் உள்ளே வந்துவிடுவார்தானே..” என்று நீதிபதி நினைத்தாரோ, என்னவோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக