________________________
பேய் பிடிப்பது – பேய் ஓட்டுவது, மந்திரம் போடுவது – செய்வினை வைப்பது – செய்வினை எடுப்பது, தகடு ஓதி வைப்பது – தாயத்து ஓதிக் கட்டுவது, சோதிடம் சொல்லுவது – வாஸ்து பார்ப்பது, பாம்பு கடி – தேள் கடி – பூரான் கடி போன்றவைகளுக்கும், வைசூரி – காலரா – முடக்குவாதம் – சிக்கன் குனியா போன்ற கொடிய நோய்களுக்கும் வேப்பிலை அடித்து, மந்திரம் ஓதித் தண்ணீர் குடிப்பதும் பார்ப்பன இந்து மதத்தின் நீண்ட காலப் பழக்கம் – ஜதீகம் என்று சொல்லி, நடத்திக் கொண்டிருக்கிறார்கள.
இவைகள் எல்லாமே பொய் – மோசடி – ஏமாற்று என்று பச்சையாகத் தெரிந்திருந்தும் கூட, ‘பழக்க வாசனை’ யால் ‘மூளைச்சலவை’ செய்யப் பட்டவர்கள், மனநோயாளிகளாகி, கைப்பணம் இழந்து, தங்கள் எதிர்காலத்தையும் இழந்து வருகிறார்கள்.
அது போன்ற மாபெரும் மோசடியாகக் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான், மலடி பிள்ளை பெறுவாள்…” என்று ஏராளமான பொய்களைச் சொல்லி, கிறிஸ்துவ மக்களின் மூளையைக் கெடுத்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் கோடிக் கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள்!
இந்தக் கொள்ளைக்காரர்களில் தமிழ்நாட்டில் பிரபலமான கொள்ளையர்களாக இருந்து, பல்லாயிரம் கோடிப் பணம் சம்பாதித்து, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர்கள் டி.ஜி.எஸ். தினகரன், அவர் மகன் பால் தினகரன், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி மோகன்–சி. லாசரஸ், சாம் ஜெபத்துரை, பெருங்குடி மோகன் என பலரும் இருக்கின்றனர்.
ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் செய்யாமல் ”அற்புதசுகக்” கூட்டங்கள், ”ஆசீர்வாதக்” கூட்டங்கள்…. என்று நடத்தி, லட்சக்கணக்கான கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி – மூளைச்சலவை செய்து, மூட மன நோயாளிகளாக்கியே பல கோடிகளைச் சம்பாதித்து, சுகபோக பணக் காரர்களாகி விட்டார்கள், இவர்கள்!
இவர்களின் திருட்டை, பொய்-மோசடியை, ஏமாற்றை, மடமை பரப்பி, மக்களை மன நோயாளிகளாக்கி ஏமாற்றுவதைத் தடுத்து, மக்களை இந்த மோசடிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நாட்டை ஆளும் அரசுக்கே உண்டு!
கள்ளநோட்டு அடிப்பவன், பித்தளையைத் தங்கம் என்று ஏமாற்றுபவன், ரூபாய் நோட்டை இரட்டித்துத் தருவதாக ஏமாற்றுகிறவன், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பவன், திருட்டு வி.சி.டி. எடுத்து விற்பவன், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றுகிறவன்…. என்று மக்கள் சமூகத்தை ஏமாற்றும் மோசடிக் கொள்ளளைக்காரர்கள் போன்றவர்கள் தான், இந்தக் கள்ளப்பிரசங்கிகளும்.
ஆனால், அந்த மோசக்காரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதைப் போல இந்தக் கள்ளப்பிரசங்கிகள் – ஏமாற்றி மோசடி செய்யும் மோசடிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை!
இதற்கு மத்திய அரசைக் கூட குறை சொல்ல முடியாது; மாநில அரசுகளே சட்டப்படி நடவடிக்கை எடுத்து இவர்களின் மோசடியைத் தடுக்கலாம். தண்டனை வாங்கித் தரலாம். அதற்கான சட்ட அதிகாரம் எப்போதும் மாநில அரசுகளுக்கு இருக்கிறது!
அந்த அதிகாரப்படியே வட மாநிலங்கள் சிலவற்றில் பேய் ஓட்டுவது, மாந்தரீகம் – செய்வினை – பேயாட்டம்…. போன்ற மூடத்தனங்களைத் தடை செய்திருப்பதோடு, கிறிஸ்துவ கள்ளப் பிரசங்கிகள் நடத்தும் ‘அற்புதசுகம்’ ‘ஆத்மசுகம்’ – ‘ஆசீர்வாதக் கூட்டம்’ போன்ற விஞ்ஞான விரோத செயல்பாடுகளுக்கும் தடை போட்டுள்ளன! உத்திரப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களில் இந்தக் கள்ளப் பிரசங்கிகள், இவர்களின் மோசடிக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை உள்ளது. (இது உண்மையல்ல. இந்தி பேசும் வட மாநிலங்களில் தமிழகத்தை விட பல்வேறு மூடநம்பிக்கைகள் பார்ப்பன இந்து மதத்தின் பெயரில் கடைபிடிக்கப்படுகின்றன. பல்வேறு கட்சிகளும், அரசும் அதை அனுமதித்தே வருகின்றன. அதே போல பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்துத்துவத்தின் செயல் திட்டம் காரணமாக கிறித்தவர்களின் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி இது மதசார்பின்மையால் அல்ல- வினவு)
ஆனால் தமிழகத்தில் அரசியல் அரங்கில் அவர்களது அடிமைகள் நிறைய இருக்கின்றனர். அதனால் தான் புதிது புதிதாகக் கிருஸ்துவ கள்ளப் பிரசங்கிகளும், சாயிபாபா, சிவசங்கர் பாபா, கல்கி பகவான்கள் இருவர், பாம்பு பகவான், கண்கட்டிச் சாமியார்…. என்று நாள்தோறும் பத்திரிகைச் செய்திகள் வருகின்றன!
கிறிஸ்துவ கள்ளப் பிரசங்கிகளின் மூளைச்சலவை – முட்டாள் மோசடிப் பிரசாரம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவ சமூகத்தைப் பாதித்துள்ளது. என்பதற்கு, அண்மையில் கோவை மாநகரத்திலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தியே சான்று!
இது செய்தி:
திருச்சியை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 43), மத போதகர். இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையம் அன்னை இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது தம்பி செல்வக்குமார் மன அமைதியற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் செல்வக்குமாரை உயிர்ப்பிப்பதாகக் கூறி, அவரது பிணத்தை வைத்து சார்லஸ் 53 நாட்களாக ஜெபம் செய்து வந்தார்.இரண்டு மாத காலம் பிணம் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்ததால் அழுகி – புழுப்புழுத்து நாற்றமெடுத்தது. இந்த நாற்றம் அந்த வட்டாரமெல்லாம் பரவ, அப்பகுதி மக்கள் திரண்டார்கள்.
பிணத்தை உயிர்ப்பிக்க 2 மாதமாக ஜெபம் நடக்கிறது என்கிற உண்மையை அறிந்ததும், மக்கள் ஆத்திரமடைந்து பிரசங்கி சார்லஸ் வீட்டு மீது கல் வீசித் தாக்கினார்கள்.
கல் வீச்சால் வீட்டுக்கதவு – ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்க, பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது பற்றிய தகவல்கள் போலீசாருக்குத் தெரிந்ததும், அவர்கள் சென்று செத்துப்போன செல்வக்குமாரின் பிணத்தைக் கைப்பற்றி, மத போதகர் சார்லசை அழைத்துப் போய் விசாரணை செய்தார்கள்.
செல்வக்குமாரின் பிணம் இருந்த அறைக்கதவை ராஜேந்திரன் என்பவரும் மற்றவர்களும் உடைத்துத் திறந்தபோது, ஆட்கள் வருவது கூட தெரியாமல் சார்லசும், மனைவி குழந்தைகளும் ஜெபம் செய்து கொண்டு இருந்தனர்.
கதவைத் திறந்தவுடன் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. அங்கு மரக்கட்டிலில் செல்வக்குமாரின் பிணம் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. இறந்து 53 நாட்கள் ஆனதால் பிரேதம் அழுகிப்போய் இருந்தது. அறையின் தரையிலும், சுவரிலும் புழுக்கள் ஓடின. சார்லஸ் குடும்பத்தினர் இந்த அறையில் தினமும் 10 மணி நேரம் முழு இரவு ஜெபம் என்று விடிய விடிய ”உயிர்ப்பித்தல் பிரார்த்தனை” செய்து வந்துள்ளனர்.
சார்லஸ் மூடநம்பிக்கை கொண்டு மனநோயாளியாகி இது போல் செயல்பட்டுள்ளார். இதற்கு உதவியாக மனைவி மற்றும் குழந்தைகளையும் பயன்படுத்தி உள்ளார். சைகோ போல் சார்லஸ் நடந்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் மனநோயாளி சார்லஸ் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:
என்னுடைய ஜெபத்தின் மகிமையால் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளேன். குருடர்களுக்கு பார்வை கிடைத்துள்ளது. முடமானவர்களை நடக்க வைத்துள்ளேன். புற்றுநோயில் இருந்தும் பலரைக் குணப்படுத்தி உள்ளேன்.- இவ்வாறு போலீசாரிடம் சார்லஸ் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இது பத்திரகைச் செய்தி; கள்ளப் பிரசங்கிகளின் மூளைச் சலவைப் பிரச்சாரம், எப்படி மனிதர்களை மனநோயாளிகளாக்கியுள்ளது என்பதைப் பார்க்கிறோம்!
எதற்கெடுத்தாலும் பயப்படும் என்னுடைய தம்பியை ஜெபத்தில் குணப்படுத்த கோவையில் எனது வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்தோம்.
கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தம்பி செல்வக்குமார், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக என்னுடைய மனைவி சாந்தி போனில் கூறினார். அப்போது நான் நாகர்கோவிலில் இருந்தேன். இது பற்றி யாரிடமும் சொல்லாதே, ஜெபம் செய்து மீண்டும் தம்பிக்கு உயிரூட்டலாம் என்று என்னுடைய மனைவியிடம் கூறினேன்.
அது போல் அவளும் யாரிடமும் கூறாமல் அறையைப் பூட்டி வைத்தாள். கீழ் வீட்டில் இருக்கும வின்சென்ட் குடும்பத்தினருக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். இறந்த என்னுடைய தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம்.
90 நாட்களில் தம்பியை உயிர்ப்பிக்க முடியும் என்று நம்பினோம். தம்பி மீண்டும் உயிர்த்தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில் போலீசாரும், பொது மக்களும் கெடுத்து விட்டனர்.
தம்பியின் ஆவியுடன் பேசினேன். அவனுடைய கை, கால்களில் அசைவு தெரிய தொடங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்து விட்டனர்.
இப்படி மனநோயாளிகளிடம் ”அற்புதசுகம்” – ”ஆசீர்வாதக் கூட்டம்” என்ற பெயரால் மோசடிப் பிரசங்கம் செய்து ‘காணிக்கை’ என்ற பெயரால் கோடிக் கோடியாகக் கொள்ளையடிக்கிறார்கள்! தமிழக அரசு கண்டு கொள்வதில்லை!
இப்படிக் கொள்ளையடித்தே கள்ளப் பிரசங்கி – டி.ஜி.எஸ். தினகரனும், மனைவி, மகன், மருமகள், பேரன் – பேத்திகள் மொத்தப் பேரும் இந்தியப் பணக்காரக் குடும்பங்களில் ஒரு குடும்பமாகி விட்டார்கள்!
இந்தக் கள்ளப் பணக்காரக் குடும்பம் அண்மையில் சென்னை – துறைமுகவாசலுக்கு எதிரே, பெரிய தொழில் நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களின் கட்டங்களும் உள்ள பகுதியில், விலை மதிப்பே சொல்ல முடியாத இடத்தில், எல்,ஐ.சி. கட்டடம் போல ஒரு பிரமாண்டமான பல அடுக்கு மாடிக் கட்டடம் கட்டி, முதலமைச்சர் மகனும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரும், திமு.க.வினரால் ”வருங்காலத் தமிழகம்” என்று போற்றப்படுபவருமான மு.க.ஸ்டாலினைக் கொண்டு திறப்புவிழா செய்திருக்கிறார்கள்!
”ஜே.சி. ஹவுஸ்” என்ற பெயரால் திறக்கப்பட்டுள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கட்டடத்தைக் கட்ட இவர்களுக்குப் பணம் ஏது? காருண்யா பல்கலைக் கல்லூரிகள் வருமானம் இத்தனை நூறு கோடி சேருமா?
எதையும், ஏன் என்று கேட்க முடியாத நிலையில் உள்ள கோபாலபுரம் ஊழல் குடும்பம், ஒரு பகல் கொள்ளைக்காரர்களின் மோசடித் தொழிலுக்கும் உடந்தையாக உள்ளது!
கள்ளப்பிரசங்கம் – ஏமாற்று ஜெபம் செய்தே ஒரு பிரமாண்டமான பல்கலைக் கழகத்தையும், இப்படிப் பல ”எல்.ஐ.சி. பில்டிங்”களையும் சொந்த உடைமையாக்கிக் கொண்டு, டாடா – பிர்லா டால்மியா வாழ்க்கை வாழும் இந்தத் திருடர்களை ஒழிக்க இப்போதைய அரசு முன்வராது. மக்கள் தான் அறிவும், தெளிவும் பெற்று சமுதாயத்தைக் காக்க முன் வர வேண்டும்.
_________________________________________________________
- நாத்திகம் இராமசாமி, நாத்திகம் – 13.07.2007 இதழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக