பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சீல்!;Posted by: Mayura Akilan
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 125க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது என்பது கிராம மக்களின் புகார். இதனடிப்படையில் ஆய்வு செய்த முன்னாள் ஆட்சியர் சகாயம் ஐ.ஏ.எஸ். கிரானைட் குவாரிகளால் அரசுக்கு 16,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அறிக்கை அளித்தார்.
இதனடிப்படையில் தற்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின் பேர் கடந்த 8 நாட்களாக பல கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் 6 முதல் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக ஆய்வு நடத்தினர். அதில் கிரானைட் குவாரியில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேலூர் அருகே தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி கிரானைட் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
மூன்று கிரானைட் நிறுவனங்களை மட்டும் ஆய்வு செய்த சகாயம் 16,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 125 கிரானைட் குவாரிகளையும் சேர்த்து அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிரானைட் குவாரி ஊழியர்கள் 19 பேர் கைது:
முன்னதாக மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் மாவட்ட எஸ்பியும் சோதனை நடத்தினார். பின்னர் குவாரி அலுவலக ஊழியர்கள் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழவளவு வீரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பி.ஆர்.பி. கிரானைட், சிந்து கிரானைட், மதுரை கிரானைட் ஆகிய கிரானைட் நிறுவன அலுவலங்களில் போலீசார் சோதனை செய்தனர்.
இ.மலம்பட்டியில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் குவாரி அருகே சுமார் 12 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. போலீசாரும் அதிகாரிகளும் சோதனைக்கு வந்தவுடன் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை மண்ணால் மூடி மறைத்தனர்.
இதையடுத்து அங்கு பணிபுரியும் 19 ஊழியர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களை கீழவளவு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
இந் நிலையில் சென்னை பூவிருந்தவல்லியை சேர்ந்தவர் வி.அன்பழகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்து வேறு மாவட்ட அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று கலெக்டர் சகாயம் தனது கடிதத்தில் கூறி உள்ளார். ஆனால் ஏற்கனவே குவாரி பகுதிகளில் பணியாற்றிய, குவாரிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத கீழ்நிலை அதிகாரிகளை கொண்டு தற்போது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது முன்னாள் கலெக்டர் சகாயத்தின் புகாரை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது.
கிரானைட் கற்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். பண பலம் படைத்தவர்கள். எனவே உள்ளூர் போலீசார் இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ள கனிமவள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக