சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய்
மதிப்புள்ள, 10 கிரவுண்டு நிலத்தை, தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு
குத்தகைக்கு விடுவதற்கு கோவில் நிர்வாகமும், சில அமைப்புகளும் எதிர்ப்பு
தெரிவித்து உள்ளன.
10 கிரவுண்டு நிலம்: பசுமை வழி சாலையில், கபாலீசுவரர் கோவிலுக்கு
சொந்தமான, 10 கிரவுண்டு நிலம் உள்ளது. இந்த நிலம், "விமன்ஸ் இந்தியா
அசோசியேஷன்' என்ற தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு, 1984 வரை 20
ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப் பட்டு இருந்தது. அதன் பின் 2005 முதல் 2015
வரை மீண்டும் குத்தகை வழங்கப்பட்டது. இந்த குத்தகைக் காலத்தில் வாடகை
மாதம் 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.அறநிலைய துறை விளம்பரம்: இந்த நிலையில், குத்தகை குறித்து, கடந்த ஜூலை 22ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை விளம்பரத்தை வெளியிட்டது. அதில், விமன்ஸ் இந்தியா அசோசியேஷன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை லாப நோக்கமின்றி செய்து வருவதால், சம்பந்தப்பட்ட நிலத்தை அவர்களுக்கே மீண்டும் குத்தøக்கு கொடுப்பதாக தெரிவிக்கப் பட்டு இருந்தது. குத்தகை நீட்டிப்பு, 1-1-2010 முதல் 29 ஆண்டுகள் 11 மாதங்களுக்கு வழங்கப் பட்டு உள்ளது. ஆனால், வாடகை 1984ல் நிர்ணயிக்கப் பட்ட அதே 3,000 ரூபாய் தான். இது குறித்து, எதிர் கருத்து அல்லது ஆலோசனை தெரிவிக்க விரும்புவோருக்கு, 23ம் தேதி (விளம்பரம் வெளியான மறுநாள்) காலை 11 மணி வரை மட்டுமே அவகாசம் கொடுக்கப் பட்டது.
அமைப்புகள் எதிர்ப்பு: இருப்பினும், "ஆலய வழிபடுவோர் சங்கம்' என்ற அமைப்பினர், குறிப்பிட்ட காலத்திற்குள் எதிர்ப்பு கடிதத்தை, அறநிலையத் துறை ஆணையரிடம் பதிவு செய்தனர். அதில், கோவில் சொத்துக்கள் சம்பந்தப் பட்ட கோவிலின் நலன், இந்து மதம் தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும், சமூக பொது நிறுவனங்களுக்கு இந்த நிலத்தை வழங்குவதால் கோவிலுக்கு எந்த பயனும் விளையப் போவதில்லை, விளம்பரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பின்னணி குறித்த விவரங்கள் குறிப்பிடப் படவில்லை என, தெரிவிக்கப் பட்டு இருந்தது. இந்த சங்கம் தவிர, ஒரு தனிநபர், தகவல் அறியும் ஆர்வலர் நடராஜன் உள்ளிட்ட சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்து உள்ளனர்.
கோவில் தரப்பு வாதம்: கோவில் தரப்பில், கடந்த ஜூலை 23ம் தேதி ஆணையரிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: விமன்ஸ் இந்தியா அசோசியேஷன் நிறுவனம், மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெறுகிறது. இந்த நிதியுதவியை வைத்து, அவர்கள் தனியார் நிலத்தில் தங்கள் பணியைத் தொடர முடியும். கோவில் நிலத்தில் கோவில் தொடர்பான பணிகளை நிர்வாகம் தொடரலாம். பசுமை வழிச் சாலையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய நிலத்தை மாதம் 3,000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுவது என்பது பொருத்தமற்றது. அதனால் அறநிலையத் துறை தனது முடிவைப் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
அறநிலைய துறையின், கூடுதல் ஆணையர், தனபாலிடம், இது குறித்து கேட்ட போது, ""இந்த வாரத்தில் இது தொடர்பான விசாரணை நடக்க உள்ளது. அப்போது அறநிலையத் துறை ஆணையர் முடிவு எடுப்பார்,'' என்றார்.
கோரிக்கை: கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தொடர்ந்து குத்தகை நீட்டிப்பு வழங்குவதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்து உள்ளதால், அறநிலையத் துறை இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவில் சம்பந்தமான பணிகளுக்கே அந்த நிலத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக