தங்க மீன்கள் என்ற படத்தைப் பார்த்து விட்டு எதுவும்
பேசாமல் கண்ணீ விட்டு அழுதாராம் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன். அந்த
அளவுக்கு அவரை அப்படம் வெகுவாக பாதித்து விட்டதாம்.
சினிமாவைப்
பார்த்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவதுதான் வழக்கம். ஆனால் சில படங்களைப்
பார்த்து சினிமாக்காரர்களே நெகிழ்ந்து போய் விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு
படமாக உருவாகியிருக்கிறது தங்க மீன்கள்.இயக்குநர் ராம் நடித்து, இயக்கியுள்ள படம்தான் தங்க மீன்கள். கற்றது தமிழ் படத்தின் இயக்குநர்தான் ராம். அப்படம் வர்த்தக ரீதியில் வெகுவாகப் போகாவிட்டாலும் கூட நல்ல படம் என்ற பாராட்டைப் பெற்றது. கதைக் கரு, கதையைச் சொன்ன விதம், தைரியம் ஆகியவற்றுக்காகப் பாராட்டப்பட்டார் ராம்.
அப்படத்திற்குப் பின்னர் அதில் நடித்த ஜீவாவும், அஞ்சலியும் வெகு தூரம் போய் விட்டனர். ஆனால் ராம் அப்படியே நின்று போய் விட்டார். இப்போது பெரும் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு உருக்கமான படத்துடன் வெளிவந்துள்ளார்.
தந்தைக்கு்ம், மகளுக்கும் இடையிலான பாச உணர்வு குறித்த படம்தான் தங்க மீன்கள். இதில் நாயகனாக நடித்திருப்பவர் ராம்தான். இப்படத்தின் கதையைக் கேட்ட இயக்குநர் கெளதம் மேனன், உருகிப் போய் விட்டாரம். தனது போட்டான் கதாஸ் நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கும் என்று கூறி தயாரித்துள்ளார். படத்தின் முதல் காப்பியை அவருக்குப் போட்டுக் காட்டியுள்ளார் ராம். படத்தைப் பார்த்து முடித்த மேனன், எதுவும் பேச முடியாமல் அழுது விட்டாராம்.
இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறுகையில் தாரே ஜமீன் பர் படத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். இப்படிப்பட்ட படம் தமிழில் வேண்டும் என்று ஆசையாக இருந்தேன். அப்போதுதான் இயக்குநர் ராம் தங்க மீன்கள் கதையைச் சொன்னார். உடனே அது என்னைக் கவர்ந்து விட்டது. மேலும் அப்படத்தில் ஹீரோவாக அவரே நடிக்க வேண்டும் என்றும் நான்தான் சொன்னேன். காரணம், அவர் கதையைச் சொன்ன விதம். அவ்வளவு அருமையாக கதையை நடித்தேக் காட்டி விட்டார் ராம்.
படத்தில் தனது அபாரமான நடிப்புத் திறனைக் காட்டியுள்ளார் ராம். அவருக்குப் போட்டியாக பத்மப்ரியாவும், ரோகினியும் நடிப்பில் பிரமிக்க வைத்துள்ளனர் என்றார் மேனன்.
முதல் தடவை படத்தைப் பார்த்த போது அழுத மேனன், அடுத்தடுத்து மூன்று முறை பார்த்து விட்டாராம். மூன்று முறையும் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.
கற்றது தமிழில் இசையில் கரைய வைத்த யுவன் ஷங்கர் ராஜாதான் இப்படத்திலும் இசை. ஒரு பாடலுக்கு நடித்தும் கொடுத்துள்ளாராம் யுவன். பாடல்களும், இசையும் பிரமிக்க வைத்துள்ளதாம். குறிப்பாக குழந்தைள் கீதம் என்ற பாடல் அத்தனை மாணவர்கள், சிறார்களை கட்டிப் போட்டு விடுமாம்.
இந்தப் பாடலை வைத்து தனியாக ஒரு இசை ஆல்பத்தையே உருவாக்கி விட்டனராம். இதற்காக பல்வேறு பள்ளிக்கூடங்களுக்குச் சென்று யுவன் ஷங்கர் ராஜா மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி, ஆடிப் பாடியதை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளனராம்.
நல்ல படம் குறித்த செய்தியை கேட்கும்போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக