வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

எம்ஜியாரின் Goon ஜேப்பியார் கைது காவல்துறை சாதனை

ஜேப்பியார் சிக்கினார்: ‘சிகிச்சை’ என்று படுத்தவர் இப்போது வேலூர் சிறையில்!

Viru News
“கைது செய்யப்படவே மாட்டார். இவரையெல்லாம் தொடக்கூடிய ‘தில்’ இங்கே யாருக்கும் கிடையாது” என்று கூறப்பட்ட அரசியல் செல்வாக்கு தொழிலதிபர் ஜேப்பியாரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது தமிழக காவல்துறை. விதிகளை மீறி, அனுமதியின்றி தனியார் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கு அமைத்த போது, சுவர் சரிந்து, பத்து பேர் பலியான குற்றச்சாட்டு இவர்மீது பதிவாகியுள்ளது.
குறிப்பிட்ட தனியார் கல்லூரியின் உரிமையாளர், ஜேப்பியார்.
கட்டடப் பொறியாளர் அண்ணாதுரை, “கல்லூரி தலைவர் ஜேப்பியார், பணியை விரைவாக முடிக்கும்படி கூறியதன் அடிப்படையில், பணியை வேகமாக செய்ய முயன்றபோது, விபத்து ஏற்பட்டது” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஜேப்பியாரின் அரசியல் பின்னணி தெரிவதற்கு, எம்.ஜி.ஆர். காலத்து அரசியல் தெரிந்திருக்க வேண்டும். காரணம், எம்.ஜி.ஆர். தயவில் திடீரென தரையில் இருந்து வானத்துக்கு உயர்ந்தவர் ஜேப்பியார்.
தமிழக காவல்துறையில் சாதாரண காவலராகப் பணிபுரிந்த ஜேப்பியாருக்கு, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே டியூட்டி போடப்பட்ட தினம் ஒன்றுதான் திருப்புமுனை. அன்றைய தினம், எம்.ஜி.ஆர்., விபத்து ஒன்றில் சிக்கினார். அவரை அதி விரைவில் மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்த போலீஸ்காரர்தான் ஜேப்பியார்.
தனக்கு உதவி செய்தவர்களுக்கு எப்போதும் கைகொடுக்கும் எம்.ஜி.ஆர்., ஜேப்பியாரை உச்சத்தில் தூக்கி விட்டார். எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.-வை துவக்கியபோது, ஜேப்பியார் அதில் சேர்ந்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலரானார். எம்.ஜி.ஆர். பதவியில் இருந்ததுவரை கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்காக வலம்வந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு, கட்சியை விட்டு ஒதுங்கினார். கவனத்தை கல்வித் துறை மீது திருப்பினார். பொறியியல் கல்லூரிகளை துவக்கினார்.
இன்று பல கல்லூரிகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. சத்யபாமா பல்கலைக் கழகம், பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, புனித ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர். ஆர்., பொறியியல் கல்லூரி, மாமல்லன் பொறியியல் கல்லூரி, செயின்ட் மேரீஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்… பட்டியல் நீளமானது.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் கல்லூரிகளை உருவாக்க துவங்கியபோதுதான் சிக்கல் வந்திருக்கிறது.
2 வாரங்களுக்கு முன் திறப்புவிழா…
கடந்த வருடம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்னம் கிராமத்தில், ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது. இதன் தலைவராக ஜேப்பியாரும், இவரது மருமகன் மரியவில்சன் என்பவர் இயக்குனராகவும் உள்ளனர். கல்லூரியில் கட்டடங்கள் எதுவும் முழுமையாக கட்டப்படவில்லை. அதற்குள் ஜேப்பியாரின் செல்வாக்கில் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, கல்லூரி வளாகத்தில், கல்லூரி அரங்கம், தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை திறந்து வைத்துவிட்டு சென்றார்.
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால், கட்டடங்கள் கட்டுமானப் பணி துரிதப்படுத்தப்பட்டது. எந்த அனுமதியும் பெறாமல், முறைகேடாக பன்முக விளையாட்டு அரங்கு கட்டும் பணி நடந்த போது, சுவர் சரிந்து விழுந்தது. அதில்தான் பத்து வட மாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். ஜேப்பியாரும் சிக்கிக் கொண்டார்.
போலீஸ் தமது முதல் குற்ற அறிக்கையில் ஜேப்பியாரின் பெயரைச் சேர்க்கவில்லை. ஜேப்பியாரால் தமது செல்வாக்கின் மூலம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது. ஆனால், மறுநாள் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் கண்ணப்பன் காஞ்சிபுரம் வந்தார். சம்பவம் தொடர்பான தகவல்களை திரட்டினார். ஸ்ரீபெரும்புதூரில் முகாமிட்டு, இவ்வழக்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கியபடி இருந்தார்.
ஜேப்பியாரை கைது செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
உடைந்து வீழ்ந்த கட்டடம்…
விஷயம் அறிந்ததும், “உடல்நிலை சரியில்லை” எனக் கூறி, சென்னை எழும்பூரில் தனியார் நீரிழிவு மையத்தில் போய் படுத்துக் கொண்டார் ஜேப்பியார்! சிகிச்சை எடுக்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், காவல்துறை விடுவதாக இல்லை. அதிகாலையில் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி அப்துல்மாலிக், அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் ஜேப்பியார் கைது செய்யப்படுவதாக அறிவித்தது போலீஸ். மருத்துவமனை நிர்வாகம், “அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளது” என்றது.
“உடனடியாக கொடுக்கப்பட வேண்டிய சிகிச்சையை இப்போது கொடுங்கள், மீதி சிகிச்சையை நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம்” என்று சில மணி நேரம் தாமதித்த போலீஸ், அதன்பின் ஜேப்பியாரை கைது செய்து, வேலூர் சிறையில் கொண்டுபோய் அடைத்துள்ளது.
அட, பரவாயில்லையே தமிழக காவல்துறை!

கருத்துகள் இல்லை: