அப்பள்ளி நிர்வாகம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி முதல் வகுப்பில் சேர்ந்த அக்குழந்தைகளின் பெயர்களை வருகைப் பதிவேட்டில் சேர்க்காமல், அவர்களை வகுப்பறையில் தனியாக ஒதுக்கி, தீண்டத்தகாதவர்களாக நடத்திவந்திருக்கிறது. இறைவணக்கம் நடத்தப்படும்பொழுது, அச்சிறுவர்கள் மற்ற மாணவர்களோடு சேர்ந்து நிறுத்தப்படாமல், ஓசிக் கிராக்கிகள் எனக் காட்டுவதற்காகத் தனியாக நிறுத்தப்பட்டுள்ளனர். வகுப்பறையில் அக்குழந்தைகள் கடைசி பெஞ்சில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்குழந்தைகள் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்னால், அவர்கள் என்ன உணவு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் டிபன் பாக்ஸைத் திறந்து சோதித்திருக்கிறது, பள்ளி நிர்வாகம். அக்குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கப்படுவதில்லை. அக்குழந்தைகளின் பெற்றோர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் கழகக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. இப்படி அக்குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, அதன் உச்சமாக அக்குழந்தைகளின் தலை சொட்டையாகத் தெரியும்படி, உச்சந்தலை முடியைக் கொத்தாக வெட்டிப் போட்டுள்ளது, பள்ளி நிர்வாகம்.
கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதலாளிகளின் கூட்டமைப்பு இச்சட்டத்திற்கு எதிராக ஜூலை 16 முதல் ஒரு வார காலத்திற்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. அக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியில் அந்த நான்கு குழந்தைகளும் அவமதிக்கப்பட்ட சம்பவமோ, அவ்வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக. ஜூலை 13 அன்று நடந்திருக்கிறது. எனவே, இச்சட்டத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வலுவாகவும் வக்கிரமாகவும் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த வன்முறை, நவீன தீண்டாமை அக்குழந்தைகளின் மீது ஏவிவிடப்பட்டுள்ளது.
அந்நான்கு குழந்தைகளையும் மற்ற மாணவர்களுக்குத் தெரியும்படிதான் ஒதுக்கி வைத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்; தலைமுடியைச் சிரைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட வக்கிரத்திற்கு ஆசிரியர்களும் துணை நின்றிருக்கிறார்கள். ஏதுமறியாத இளம் குழந்தைகளை இப்படி அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கும் அப்பள்ளி நிர்வாகிகளையும் ஆசிரியர்களையும் நடுத்தெருவில் நிறுத்திச் சவுக்கால் அடிப்பதுதான் நியாயம்.
ஆனால், வல்லமை பொருந்திய மைய அரசும், மாநில அரசும் மயில் இறகால் தடவிவிடுவது போல், “அப்பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்; அந்த நோட்டீசுக்குப் பதில் அளிக்க பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம்; அந்நிர்வாகம் பதில் அளித்த பிறகு, அது பற்றி விசாரித்து, உண்மை இருந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம்” என அறிக்கை சவடால்தான் அடித்து வருகின்றன.
காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் எனப் பல கவர்ச்சிகரமான சட்டங்களை அடுத்தடுத்து இயற்றியிருக்கிறது. அப்படிபட்ட ஏட்டுச் சுரைக்காய் சட்டங்களுள் ஒன்றுதான் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். குழந்தைகளின் கல்வி உரிமை பற்றிப் பேசுவதாகப் பீற்றிக் கொள்ளப்படும் இச்சட்டமும், பல்வேறு உரிமைச் சட்டங்களைப் போலவே, பல்வேறு ஓட்டைகளுடன் அரைவேக்காட்டுத்தனமாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டைகளை அடைத்துவிட்டு, இந்தச் சட்டத்தைக் கண்டிப்பாகவும், தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்தை மீறிக் குழந்தைகளைத் துன்புறுத்தாத வண்ணமும் அமல்படுத்தினால்கூட, இச்சட்டம் குழந்தைகளின் கல்வி உரிமைக்கானதாக, அவ்வுரிமையை உத்தரவாதப்படுத்துவதாக அமைந்துவிடாது.
இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கமே, அரசுப் பணத்தைத் தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு வாரிக் கொடுத்து, தனியார்மயத்தின் கீழ் புதுவிதமான அரசு உதவி பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை உருவாக்கிப் பராமரிப்பதுதான்; நரியைப் பரியாக்கியாக்கிக் காட்டுவது போல, கட்டணக் கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி முதலாளிகளை, சமூகப் பொறுப்புமிக்கவர்களாகக் காட்டுவதுதான். தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் மட்டும் இக்கட்டாயக் கல்வித் திட்டத்தை நிறைவேற்ற 141 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏழை மாணவர்களின் பெயரால் அரசுப் பணம் மடைமாற்றி விடப்படுகிறது.
தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை உருவாக்கியது; மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவது; குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துவது; தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் தாழ்த்தப்பட்டபழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவது என அரசு பல வழிகளில் கல்வித்துறையில் நுழைந்துள்ள தனியார்மயத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை மாணவர்களின் பெயரால் எடுத்து வருகிறது. அதிலொன்றுதான் இக்கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்.
இந்தச் சட்டத்தின் மூலம் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி, ஒரேவிதமான பள்ளிக் கல்வியைக் கட்டாயமாகவும் இலவசமாகவும் கொடுக்கும் பொறுப்பிலிருந்தும், கடமையிலிருந்தும் அரசு தந்திரமாக விலகிக் கொள்கிறது. கல்வி தனியார்மயமானலும்கூட, இது போன்ற கல்விச்சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஆங்கில வழிக் கல்வியைப் பெற்றுவிட முடியும் என்ற மயக்கத்தை ஏழை மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்துகிறது.
இக்கவர்ச்சிக்கு ஏழைக் குடும்பங்களைப் பலியாக்குவதன் மூலம், “கல்வியைத் தனியார்மயமாக்கதே!” என்ற கோரிக்கையை, போராட்டத்தைத் திசை திருப்புவதும், கல்வி என்பது காசுக்கு விற்கப்படும் கடைச்சரக்குதான் என்பதை நிலைநிறுத்துவதுமே அரசின் நோக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக