கருவிலேயே கொல்லும் கொடூரம்... ஆண் - பெண் குழந்தைகளுக்கு இடையேயான விகிதாச்சார மாறுபாடு அதிகரித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011 ம் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இருந்ததை விட 2012 ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மத்தியபிரதேசம், பீகார், உத்தரகண்ட், ஒடிஸா மாநிலங்களில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் 2011 ம் ஆண்டு 1000 ஆண்குழந்தைகளுக்கு 912 பெண் குழந்தைகள் இருந்த நிலை மாறி 2012 ம் ஆண்டு 904 ஆக குறைந்துள்ளது. அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 886ல் இருந்து 866 ஆகாவும், பீகாரில் 933 ல் இருந்து 919 ஆகாவும், ஒடிஸாவில் 934 ல் இருந்து 905 ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல் அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
பெண்குழந்தைகளை கருவிலேயே அழிப்பது குற்றம் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. ஆனாலும் அதை கருத்தில் கொள்ளாமல் பெண் குழந்தைகளை அழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் பெண் குழந்தைகளை கண்டறிந்து கூறுவது சட்டப்படி குற்றம் என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பணம் சம்பாதிப்பதற்காக பல ஸ்கேன் சென்டர்கள் இந்த படுபாதக செயல்களை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எத்தனை சட்டங்களை இயற்றினாலும், கடுமையான தண்டனைகள் வழங்கினாலும் கருவில் கொல்லும் கலாச்சாரம் ஒழிந்தால்தான் பெண் குழந்தைகளுக்கு விமோசனம் கிடைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக