ஏர்-ஹோஸ்டஸ் கீத்திகா மரண விசாரணை: லேப்-டாப் மர்ம இ-மெயில்கள்!
Viru News கீத்திகா. அதீதமாக உணர்ச்சி வசப்படும் பெண் என்கிறார் காண்டாவின் வக்கீல்.
விமான
பணிப்பெண் கீ்த்திகா சர்மா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பதவியை
ராஜினாமா செய்துவிட்டு, தலைமறைவாகி உள்ள ஹரியானா முன்னாள் உள்துறை
அமைச்சர் கோபால் கோயல் காண்டாவை கைது செய்ய பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடிப் பிடிப்பதற்காக போலீஸ் 6 விசேட
குழுக்களை அமைத்துள்ளது.முன்னாள் அமைச்சர் காண்டா மீது, தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டு, மற்றும் விசாரணைக்கு ஆஜராக மறுத்த குற்றச்சாட்டு ஆகியவை பதிவாகியுள்ளன.
காண்டாவின் வீடு, அலுவலகம் ஆகியவை சோதனைக்கு உள்ளாகியுள்ளன. அத்துடன் அவர் சமீபத்தில் ஆரம்பித்த எம்.டி.கே. இன்டர்நேஷனல் ஸ்கூல், மற்றும் அவருக்கு சொந்தமான ஹோட்டல்கள் சோதனையிடப்பட்டுள்ளன. அவரது தற்போதைய மறைவிடம் குறித்த தடயங்கள் ஏதும், இந்த சோதனைகளில் சிக்கவில்லை.
காண்டாவின் மீதான குற்றச்சாட்டு, அவரது ராஜினாமா, தற்போது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை ஆகியவை, ஹரியானா அரசியலில் பெரும் புயலை கிளப்பி விட்டுள்ளன. காண்டா ராஜினாமா செய்து விட்டாலும், அவரை உள்துறை அமைச்சராக வைத்திருந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்குகின்றன.
அதே நேரத்தில் டில்லி போலீஸூம் கடும் கண்டனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பெரும் செல்வாக்குள்ள காண்டாமீது ஆக்ஷன் எடுக்க போலீஸ் தயங்குகிறது என்று டில்லி மீடியாக்கள் போலீஸை நார்நாராக கிழிக்கின்றன.keehகீத்திகா மரணம் marமர்மம்
தற்கொலை செய்துகொண்ட 23 வயதான கீத்திகா, காண்டாவுக்கு சொந்தமான MDLR ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிந்தவர். அதன்பின், காண்டாவின் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, துபாயில் இருந்து இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பணிபுரிய சென்றார்.
இவரை மீண்டும் தமது நிறுவனத்துக்கு எப்படியாவது கொண்டுவந்து விடவேண்டும் என்று காண்டா முயற்சித்தார் என்கிறார்கள். கீத்திகா அதற்கு சம்மதிக்கவில்லை. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வேலையை உதறிவிட்டு வந்தால், அவரது மேற்படிப்புக்கான (MBA) செலவு முழுவதையும் காண்டாவின் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்று ஆஃபர் கொடுத்தும், கீத்திகா திரும்ப மறுத்துவிட்டார்.
அதையடுத்து காண்டாவின் MDLR ஏர்லைன்ஸ், துபாயிலுள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்ஸூக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்தக் கடிதத்தில்…
கீத்திகா எமது நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தபோது, போலியான ஆவணங்களை கொடுத்தார். அத்துடன் அவரது நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால், நாம் அவரை டிஸ்மிஸ் செய்தோம்” என்று எழுதப்பட்டிருக்க, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கீத்திகாவை பணி நீக்கம் செய்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டது.
அதன்பின் டில்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள தனது பிளாட்டில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் கீத்திகா.
இறக்கும்போது அவர் எழுதி வைத்த கடிதத்தில், “எனது மரணத்துக்கு காரணம், காண்டாவும், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் அருணாவும்தான். அவர்கள் இருவரும் கொடுத்த தொல்லைகளை தாங்க முடியாமலேயே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது.
போலீஸ் அருணாவை தடுத்து வைத்து விசாரித்து வருகிறது. காண்டா தலைமறைவாகி விட்டார்.
காண்டாவின் வக்கீல் துல்சி, “கீத்திகா அதீதமாக உணர்ச்சிவசப்படும் பெண் (hypersensitive girl). காண்டா மீது காதல், கோபம், குரோதம் என அவரது உணர்ச்சிகள் மாறியபடி இருக்கும். காண்டா, கீத்திகாவின் பெற்றோரை போனில் அழைத்து, கீத்திகா தமது நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தது தொடர்பாக சில பேப்பர்களில் கையெழுத்து போட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கீத்திகா தற்கொலை செய்திருக்கலாம்” என்றார்.
தற்கொலை செய்துகொண்ட கீத்திகாவின் லேப்-டாப்பை சோதனையிட்டபோது, அதில் சில விசித்திரமான இ-மெயில்கள் உள்ளன. துபாயில் உள்ள இந்திய தூதரகமும், துபாய் குடிவரவு இலாகாவும் கீத்திகாவை துபாயில் இருந்து நாடுகடத்துவது பற்றி பிரஸ்தாபிக்கும் இ-மெயில்கள் அவை. அதற்கு காரணம், ஏர்லைன்ஸ் விவகாரமல்ல, துபாயில் நடைபெற்ற ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் என்று தெரிகிறது.
நாடுகடத்தப்படும் அளவுக்கு போவதென்றால், அந்த விவகாரமும் ஏதோ பெரிய விவகாரமாக இருக்க வேண்டும். ஆனால் கீத்திகா, துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு இந்தியா வரவில்லை. சுயமாகவே வந்து சேர்ந்திருக்கிறார்.
டில்லி போலீஸ், “இந்த இ-மெயில்களின் உண்மைத் தன்மை பற்றி விசாரித்து வருகிறோம். அதுதான் நாம் மெதுவாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் ஹரியானாவில் இருந்து துபாய் வரை நிறையவே மர்மங்கள் உள்ளன” என்று கூறியுள்ளது.
கீத்திகாவின் சகோதரர் அன்கிட் சர்மா, “கண்டா உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர் வெளியே இருந்துதான், புதிது புதிதாக கதைகள் பலவற்றை கிளப்பி விடுகிறார்” என்கிறார்.
துபாயில் என்ன நடந்தது? அதில் தொடர்புடைய பண விவகாரம் என்ன? அதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்தால், பல மர்மங்கள் விலகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக