ஞாயிறு, 26 ஜூலை, 2020

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்குவதால் என்ன பயன்?


இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?கமலேஷ் - பிபிசி நிருபர் : இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ஐந்தாண்டு குறுகிய சேவை நிரந்தர சேவையாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. இராணுவத்தின் முன்னாள் பெண் அதிகாரிகள், இதைச் சமத்துவத்தை நோக்கிய ஒரு பெரிய படியாகக் கருதுகின்றனர். மேலும், இது அவர்களுக்கு சாத்தியமில்லாத ஒரு கனவு நனவானது போலாகும்.
"நாங்கள் 2008ல் இதற்கான போராட்டத்தைத் தொடங்கியபோது, இந்த நாள் உண்மையில் வரும் என்று நான் நினைக்கவில்லை. பெண்களுக்கு நிரந்தர கமிஷன் (கட்டளைப் பணி) பெறுவது எளிதல்ல, ஆனால், முயற்சி பலன் தரும் என்பது நிரூபணமாகியுள்ளது. இது பெண்களுக்கு அதிக உற்சாகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்." ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டாக்டர் அனுபமா முன்ஷி, மேலும் பதினொரு பெண் அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண்களின் நிரந்தர கமிஷன் கோரி, மனு அளித்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணையில், இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பிப்ரவரி 17 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இப்போது இந்திய இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?

நிரந்தர கமிஷன் என்பது என்ன?

குறுகிய கால சேவை கமிஷனின் கீழ் பெண்கள் 10 அல்லது 14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். இதற்குப் பிறகு, அவர் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் இராணுவத்தில் தமது சேவைகளை மேலும் தொடரவும், தரவரிசைப்படி ஓய்வு பெறவும் முடியும். அவர்களுக்கு ஓய்வூதியமும் மற்ற அனைத்துப் பயன்களும் கிடைக்கும்.1992 முதல் பெண்கள் குழு குறுகியகால சேவைக்கு நியமிக்கப்பட்டது. அப்போது அது ஐந்து ஆண்டுகளாக இருந்தது. பின்னர் இந்தச் சேவையின் காலம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. 2006 இல், இது 14 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.
ஆண் அதிகாரிகள் 10 ஆண்டு குறுகிய சேவை கட்டளைப் பணியை நிறைவு செய்த தகுதி அடிப்படையில் நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது, குறுகியகாலச் சேவை மூலம் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள், ஆனால், ஆண்களை நிரந்தர ஆணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்யலாம்.
நிரந்தர கமிஷன் மூலம் பெண்கள் நேரடியாக சேர்க்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கெனத் தனி விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

10 பிரிவுகளிலும் நிரந்தர கமிஷன்

இந்திய இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், அரசாங்கத்தின் இந்த முடிவு, பெண் அதிகாரிகளுக்கு இராணுவத்தில் அதிக பங்கு வகிக்க அதிகாரம் அளிப்பதற்கு வழி வகுக்கும் என்றார்.கர்னல் அமன் ஆனந்த் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம், "இந்திய இராணுவத்தின் மொத்த 10 பிரிவுகளிலும் குறுகிய சேவை கமிஷனில் உள்ள பெண் அதிகாரிகளை நிரந்தரமாக நியமிக்க இந்த உத்தரவு வழி வகுக்கிறது."இராணுவ விமானப் பாதுகாப்பு (ஏஏடி), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப் போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் இயந்திர பொறியாளர்கள் (ஈஎம்இ), ராணுவ சேவைப் படை (ஏஎஸ்சி), ராணுவ கட்டளைப் படை (ஏஓசி) மற்றும் புலனாய்வுப் பிரிவு என 10 பிரிவுகளிலும் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் அறிமுகப்படுத்தப்படுவதாக கர்னல் ஆனந்த் தெரிவித்தார். தற்போது, நீதிபதி மற்றும் அட்வகேட் ஜெனரல்( ஜே ஏ ஜி) மற்றும் ராணுவ கல்விப் படை (ஏ.இ.சி) ஆகியவற்றில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி நடைமுறையில் உள்ளது.


இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?
இராணுவ செய்தித் தொடர்பாளர், "அதே போல் தகுதியுடைய அனைத்து எஸ்.எஸ்.சி பெண் அதிகாரிகளும் தங்கள் விருப்பத்தைத் தெரிவு செய்து தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பித்தவுடன், அவர்களின் தேர்வு குறித்துத் தேர்வு வாரியம் தீர்மானிக்கும்" என்றும் கூறினார்.
இதன் மூலம், இந்திய இராணுவத்தில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு மட்டுமல்ல, இராணுவத்தில் பணியிலிருக்கும் பெண்களுக்கும் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது, இதில் சமத்துவமும் மரியாதையும் உள்ளது.

ஒரு முடிவால் பல மாற்றங்கள்

நிரந்தர கமிஷன் தொடர்பான முதல் மனு 2003 இல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர், பதினோரு பெண் அதிகாரிகள் இது தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவில், பெண் அதிகாரிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசாங்கம் இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பிப்ரவரி 2020 இல், உச்சநீதிமன்றமும் பெண் அதிகாரிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
மனுதாரர்களில் ஒருவரான, முன்னாள் இராணுவ அதிகாரி அங்கிதா ஸ்ரீவாஸ்தவா, இது ஒரு பெரிய முடிவு என்றும், இது வரும் காலங்களில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும் கூறுகிறார். கட்டளைப் படையில் 14 ஆண்டுகள் சேவை செய்த பின்னர் அங்கிதா ஸ்ரீவாஸ்தவா எஸ்.எஸ்.சி.யில் இருந்து ஓய்வு பெற்றார். இது பெண்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
இதனால் ஏற்படும் முதல் விளைவு என்னவென்றால், பெண் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். குறுகிய சேவை கமிஷனில் லெப்டினன்ட் கர்னலுக்கு மேல் ஒரு பெண் அதிகாரியால் உயர முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது பெண்கள் மேம்பட்ட கற்றல் துறை சார்ந்த படிப்புகளுக்கும் அனுப்பப்படுவார்கள். சிறப்பான செயல்பாடு பதவி உயர்வுக்கு வழி வகுக்கும். நிரந்தர கமிஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெண்கள், கர்னல்கள், பிரிகேடியர்கள் மற்றும் ஜெனரல்களாக உயர்வு பெற முடியும்.


இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?
இரண்டாவது நன்மை என்னவென்றால், அரசாங்க உத்தரவு வரும்போது, இப்போது பெண்களைச் சேர்ப்பதற்காக வரும் விளம்பரங்களில், தகுதியின் அடிப்படையில் நிரந்தர கமிஷன் வழங்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்படும். முந்தைய விளம்பரங்களில் 14 வருட குறுகிய சேவை மட்டுமே குறிப்பிடப்பட்டன.
இந்த 10 பிரிவுகளிலும் நிரந்தர கமிஷன் மூலம் இராணுவத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை இப்போது புதிதாக வரும் பெண்கள் அறிந்து கொள்வார்கள். இதற்கேற்றாற்போல், அவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளையும் பிற தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
மூன்றாவதாக, எஸ்.எஸ்.சி.யின் 14 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, பெண்கள் ஓய்வுபெறும் போது 37-38 வயதை எட்டுகிறார்கள். 38 வயதில் இராணுவத்திலிருந்து வெளியே வரும்போது, பிற துறைகளில் வேலை வாய்ப்புகள் தேட வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது பெண்களுக்கு 54 வயது வரை பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
அனுபமா முன்ஷியும் இதற்கு உடன்படுகிறார். "அந்த வயதில், இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையில் ஒரு தேக்க நிலை உருவாகிறது. பல பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லவோ அல்லது ஆசிரியப் பணி செய்யவோ வாய்ப்புள்ளது. ஆசிரியப் பணிக்கும் பி.எட் அல்லது பி.எச்.டி. படித்திருக்க வேண்டும். கல்லூரி மாணவர்களைப் போல் மீண்டும் கல்வி பயில வேண்டும். தனியார் நிறுவனங்களில் கூட, ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார்.
அனுபமா இப்போது பிஎச்டி முடித்து ஆசிரியப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர கமிஷனுக்கு எதிர்ப்பு ஏன் இருந்தது?

பெண்கள் நீண்ட காலமாக இந்திய ராணுவத்தில் நிரந்தர கமிஷன் கோரி வந்தனர். இருப்பினும், இது இராணுவ மற்றும் அரசாங்க மட்டத்தில் எதிர்க்கப்பட்டு வந்துள்ளது. திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களும் ஆண்களின் எதிர்ப்பும் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டது.


இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?
அங்கிதா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "பெண்கள் சோதனை முறையில் தான் குறுகிய கால சேவைக்கு நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், பெண் அதிகாரிகள் தங்கள் திறமையை நிரூபித்தனர். பெண்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பலவீனமானவர்கள் இல்லை என்றும் எங்களால் இந்திய ராணுவத்திற்குப் பலமூட்ட முடியும் என்றும் நாங்கள் பாராட்டப்பட்டோம். ஆனால், சிறிது சிறிதாக, பல ஆண் அதிகாரிகளின் மனதில் பாதுகாப்பின்மை உணர்வு வந்தது. தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், பெண்கள் அதிகாரம் பெறுவதாக அவர்கள் உணரத் தொடங்கினர். "
"அதன் பிறகு, பெண்களின் குடும்ப நிர்ப்பந்தங்கள் ஒரு பிரச்சினையாக உருமாற்றப்பட்டன. அவர்கள் களத்துக்குச் செல்ல முடியாது, அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள், குழந்தைகளைப் பெறுவார்கள், அதற்காக விடுமுறை எடுப்பார்கள். இது வேலையை பாதிக்கும், எனவே அவர்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது."
அனுபமா முன்ஷி மேலும் கூறுகிறார், "எங்கள் ஜவான்கள் கிராமப்புறங்களிலிருந்து வருவதால், அவர்கள் ஒரு பெண் அதிகாரியின் கீழ் பணிபுரிவதும், அவரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதும் சங்கடமாக நினைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். ஆனால், அது ஆரம்ப காலத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது அவ்வாறு இல்லை. ஆண் சிப்பாய்கள் தங்களைப் போலவே இராணுவத்தில் பெண்களும் கடுமையாக உழைப்பதைக் கண்டதும், யாரும் இங்கு குறுக்குவழிகளில் வரவில்லை என்று உணர்ந்து அவர்களை மதிக்கத் தொடங்கினர்".
அவர் கூறுகிறார், "நானே ஆண் வீரர்களுடன் பலமுறை பேசியிருக்கிறேன். மேடம் ஆணையை நாங்கள் கடைபிடிக்க வேண்டும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல என்று அவர்கள் கூறினார்கள். எனக்குக் கீழ் பணிபுரியும் பல இளைஞர்கள் கூட வந்து தங்கள் பிரச்சினைகளை என்னிடம் சொல்வார்கள், ஆனால் ஆண் அதிகாரிகளிடம் சொல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தால், மிகவும் உணர்ச்சியுடன் கேட்பார் என்று அவர்கள் நம்பினார்கள். "
ஓய்வுபெற்ற இரண்டு அதிகாரிகளும், பெண்கள், தங்களுக்கு முன் இருந்த வருங்காலப் பாதை மூடப்பட்டிருந்தாலும், ஐந்தாண்டு குறுகிய சேவையின் போது கடினமாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றியதாகக் கூறுகிறார்கள். இனி வரும் பெண்கள் பல மடங்கு கடினமாக உழைப்பார்கள், ஏனென்றால் அவர்கள் இராணுவத்தில் எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். இது ஒரு பெரிய உத்வேகம் அளிக்கும்.
வரும் காலங்களில் சில பெண்கள் பிரிகேடியர்களாவதை நாம் பார்க்கலாம். ஒரே ஒருவர் தான் அப்படி உயர்வடைகிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அந்த ஒருவருக்குச் சம வாய்ப்பு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: