புதன், 29 ஜூலை, 2020

அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர் விமானங்கள்

 மாலைமலர் :  பிரான்சிடம் இருந்து
வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.
சண்டிகர்:பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு புறப்பட்டன..
பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன. ரபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வந்தன.
பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை இந்திய விமானப்படை தனது டுவிட்டரில் பகிர்ந்தது. ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்திய எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் நுழைந்தன. அப்போது மேற்கு அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலுடன் ரபேல் போர் விமானத்தை இயக்கிவரும் குழு தொடர்பு கொண்டது.

 ‘‘இந்திய கடல் எல்லைக்குள் ரபேல் தலைவரை வரவேற்கிறோம் என்று ஐ.என்.எஸ்.’’ தகவல் அனுப்பியது.

அதற்கு ரபேல் விமானி, ‘‘மிக்க நன்றி. கடல்களைக் காக்கும் இந்திய போர்க்கப்பலைக் கொண்டிருப்பது மிகவும் உறுதியளிக்கிறது என்றார்.

பின்னர், ஐஎன்எஸ, ‘‘பெருஞ்சிறப்போடு இந்திய எல்லையை தொடலாம். மகிழ்ச்சியான தரையிறக்கங்கள்’’ என்றது.

அதன்பின் இரண்டு Su-30MKIs விமானங்கள் படைசூழ கம்பீரமாக அம்பாலா நோக்கி ரபேல் பயணத்தை தொடர்ந்தது.

இந்நிலையில், மாலை 3.15 மணியளவில் 5 ரபேல் போர் விமானங்களும் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து, புதிய விமானங்கள் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்படும்போது விமானத்தை சுற்றிலும் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தளத்தில் வரவேற்கப்பட்டது.

இதையடுத்து, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ரபேல் போர் விமானங்களை வரவேற்றார். இந்த வரவேற்பு நடைமுறைகளுக்கு பின்னர் தங்க அம்புகள் (Golden Arrows)
பிரிவில் ரபேல் இணைக்கப்படும்

கருத்துகள் இல்லை: