ஞாயிறு, 26 ஜூலை, 2020

தங்கத்துக்கு பங்கம் ?.. தேவைக்கும் அதிகமாக நகை வாங்கி சேர்ப்பது...

சாவித்திரி ண்ணன் :   இனிமே தங்கத்தை மனதால் கூட நினைத்து பார்க்க முடியாது! அந்த அளவுக்கு விலை ஏறிக் கொண்டே உள்ளது! இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 4,900 ஆயிரத்தை தொட்டுவிட்டது…!
கடந்த நூறாண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றத்தை அவதானித்தால் இந்த உலகத்தில் பொன்,மண் இந்த இரண்டை தவிர்த்து வேறொன்றும் இவ்வளவு விலையேறியிருக்குமா என்பது சந்தேகம் தான்!
1920 – ரூ 2.10 பைசா!
1930 – ரூ 3.05 பைசா!
1947 – ரூ 5.40 பைசா!
1964 – ரூ 6.32 பைசா!
1974 – ரூ 50.60 பைசா!
1994 – ரூ 460
2004 – ரூ 585
2014 – ரூ 2,800
2020 – ரூ 4,900
அதாவது, நூறாண்டுகளில் தங்கம் 2,400 மடங்கு விலை உயர்ந்துள்ளது. அதுவும் தங்கத்தின் விலை சென்ற ஒரே ஆண்டில் ஒரு கிராம் ரூ 3,000 த்தில் இருந்து 4,900 ஆக உயர்ந்துள்ளதானது வரலாற்றில் இல்லாத பெரும் விலையேற்றம்!
இதில் 2008 முதல் உலக நாடுகள் தங்கள் அரசு வங்கியில் தங்கத்தை ஒரு சேமிப்பாக வைக்கத் தொடங்கியது முதல் தான் தங்கம் அதிக விலையேற்றம் காண ஆரம்பித்தது. அந்த வகையில் உலகில் அமெரிக்கா தான் 8,135 டன் தங்கத்தை வங்கியில் வைத்துள்ள மிகப் பெரிய பணக்கார நாடு! இந்திய அரசோ வெறும் 618 டன் தங்கத்தை தான் வங்கியில் இருப்பாக வைத்துள்ளது!
ஆனால், உலகில் காலங்காலமாக தங்கத்தை அதிகமாக வாங்கி பயன்படுத்தும் நாடு என்ற வகையில் இந்திய மக்களின் வீடுகளில் உள்ள தங்கம் 28,000 க்கும் மேற்பட்ட டன்களாகும்!
அதாவது, இது கோயில்கள், மற்றும் அறக்கட்டளைகளை சேர்க்காத கணக்கு! இந்த வகையில் தங்கம் கையிருப்பில் உலகில் இந்தியாவை மிஞ்ச இன்னொரு நாடில்லை!
கேரளாவில் ஸ்வப்னா சுரேஷ் கடத்திய 30 கிலோ தங்கம் எல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்ற அளவுக்கு உலகிலேயே தங்கத்தை அதிகமாக கடத்தும் நாடாக இந்தியா உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகாரபூர்வமாக 900 டன்களும்,கடத்தல் மூலமாக சுமார் 400 டன்களும் தங்கம் வருகிறது! இந்தளவுக்கு அதிகமாக தங்க கடத்தல் நடப்பதற்குக் காரணம் தங்கம் இறக்குமதிக்கு அரசு 12.5% வரி போடுவது தான்! (இதற்கும் மேல் 3% ஜி.எஸ்.டி) உலகில் வேறு எந்த நாடும் இவ்வளவு வரி போடுவதில்லை என்பது மாத்திரமல்ல, பெரும்பாலான நாடுகளில் தங்கத்திற்கு இறக்குமதி வரியே இல்லை!
அதனால் தான் அந்த மாதிரி நாடுகளில் தங்கம் வாங்கி பயங்கர ரிஸ்க் எடுத்து தங்க கடத்தல் நடக்கிறது!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் என்பது ஒரு செண்டிமெண்டான விஷயம்.அதனால் தான் இந்தியாவிலேயே அதிகத் தங்க பயன்பாடுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது!
அதென்னவோ, சிறு வயதில் இருந்தே எனக்கு தங்கத்தில் துளியளவு கூட ஆர்வம் ஏற்பட்டதேயில்லை! இத்தனைக்கும் எங்கள் சமூகத்தில் பலர் நகை வியாபாரம் செய்பவர்கள்! கல்யாணம் செய்த போதே, ’’உன் புன்னகைக்கு ஈடாகுமுமா பொன் நகை ! எனவே,நகை மீது நீ ஆசை வைக்க கூடாது’’ என்று ஐஸ் வைத்துப் என் மனைவியிடம் கூறிவிட்டேன்.
எங்கள் கல்யாணத்தின் போது எனக்கு அன்பளிப்பாக பத்து மோதிரங்கள் வந்தன! அதில் ஒரே ஒரு மோதிரத்தை மாத்திரம் ஆரம்பத்தில் சில நாட்கள் மட்டுமே போட்டேன். பிறகு அதையும் கழட்டி வைத்துவிட்டேன்! அந்த பத்து மோதிரங்களையும் நானும் அன்பளிப்பாக சமயம் வரும் போது தந்து அழித்து விட்டேன்!
நகை அணிவது ஆடம்பரமானது என்ற மனநிலைக்கும் அப்பால், அது அணிவதே அநீதியானது என்ற உணர்வு எப்படியோ என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. காந்தியத்தின் மீதான ஈர்ப்பே அதற்கு காரணம் என்று தோன்றுகிறது.
நான் சென்னை ராயபுரம் பி.ஏ.கே மேல் நிலை பள்ளியில் படித்த போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் டவுசருக்கு பதிலாக தங்களை பேண்ட் போட அனுமதிக்க கோரி போராட்டம் (1979) நடத்தினார்கள்! பள்ளி நிர்வாகி திரு.போஸ் அவர்கள் மாணவர்கள் அனைவரையும் அழைத்து கருத்து கேட்டார்! அப்போது நான், ’’இங்கே எல்லா மாணவர்களுக்கும் பேண்ட் போடும் வசதி இருக்காது. இது பேண்ட் போட வசதியில்லாத மாணவர்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும்.நம் தேசத் தந்தையே அரை ஆடை கட்டிய பக்கிரியாகத் தானே இருந்தார்’’.என்றேன். நான் பேசியதை ஆதரித்து சில மாணவர்கள் கை தட்டினார்கள்!
என் மனைவி என்னிடம் நகை வாங்கித் தரும்படி கேட்டதேயில்லை. ஆனால்,அவங்ககிட்ட இருக்கும் நகைகளை நான் கஷ்டம் வரும் போது அடகு வைத்து,பிறகு திரும்ப எடுத்து தந்துள்ளேன்! கஷ்டம் வரும் போது அவங்களே தன் நகைகளை கழட்டி தந்துவிடுவார்கள்! சென்ற ஆண்டு தாலிசெயின் இத்துப் போய்விட்டது. ஆகவே அதை உருக்கி புதுசா போடணும்,கொஞ்சம் கூடுதலாக அதில் தங்கம் சேர்க்கணும் என்றார்கள்! அதை மட்டும் செய்து தந்தேன். இந்த வகையில் ஒரளவாவது தங்கம் கையில் இருப்பது ஆபத்துக்கு உதவும் என்பது என் அனுபவம்!
நம் மரபில் குண்டு மணியளவாவது தாலிக்கு தங்கம் வேண்டும் என்ற எண்ணம் அடித்தளத்தில் உள்ள ஏழைக்கு கூட உள்ளது. அதில் குறை காணமுடியாது. அவசியமும் கூட! ஆனால்,அந்த குண்டுமணியளவு தங்கம் கூட இனி ஏழைகளுக்கு சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது.
ஆகவே, நம்மில் சிலராவது தங்கத்தை இனி முடிந்த அளவு புறக்கணிக்கும் மனநிலைக்கு வந்தாக வேண்டும். உலகிலேயே தங்கத்தை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருப்பதை நான் பெருமையாக கருதவில்லை!
இந்தியாவால் ஆண்டுக்கு 14 டன்கள் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. ஆனால்,உலகில் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகமாக சுமார் 1,300 டன்கள் தங்கம் வெளியிலிருந்து வாங்கப்படுகிறது! அமெரிக்க மக்களுக்கே ஆண்டுக்கு 190 டன்கள் தான் நகை தேவைப்படுகிறது.ஆனால், 30 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழும், 50 கோடிக்கும் அதிகமானோர் பொருளாதார பாதுகாப்பற்ற வாழ்க்கை வாழ்பவர்களாகவும் உள்ள நம் நாட்டில் ’’தேவைக்கும் அதிகமாக நகை வாங்கி சேர்ப்பது ஆரோக்கியமான மனநிலைக்கு அடையாளமல்ல’’ என்பது என் தனிப்பட்ட கருத்து!

கருத்துகள் இல்லை: