ஞாயிறு, 26 ஜூலை, 2020

சச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் பேராசை வாரிசுகள் .

சாவித்திரி ண்ணன் : மீண்டும்,மீண்டும் ஒரே விதமான காட்சிகள் தான் அரங்கேறுகின்றன!
எந்த படிக்கட்டுகளிலும் கால்படாமல் உச்சத்தில் போய் உட்காரத் துடிக்கும் வாரிசுகளின் பேராசை அரசியலின் அவசரக் குடுக்கைத் தனத்தின் விளைவே ராஜஸ்தான் சம்பவங்கள்!
சச்சின் பைலட் 2002 ல் காங்கிரசில் சேர்ந்த போது அழகான தோற்றம், அருமையான ஆங்கிலப் புலமை,
காலஞ்சென்ற ராஜேஸ் பைலட்டின் மகன் ஆகிய தகுதிகள் தவிர்த்து அரசியலின் அரிச்சுவடி கூட அவருக்குத் தெரியாது. ஆனால்,இரண்டே வருடத்தில் 26 வயதில் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு, அதைத் தொடர்ந்து உடனே பாராளுமன்ற உள்விவகாரத் துறை நிலைக் குழு உறுப்பினர்.விமானத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் தேடி வந்தன .மீண்டும்,மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் வாய்ப்பு, 2012 ல் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் பதவி என எல்லாம் வாய்த்தன!.
ஆயினும், 2014 ல் அவரது அஜ்மீர் தொகுதியை தக்க வைத்துக் கொள்ளத் திரானியின்றி வாய்ப்பிழந்தவருக்கு, காங்கிரசின் மாநிலத் தலைவர் பதவி தரப்பட்டது. இதெல்லாமே பல சீனியர்களை ஒவர்டேக் செய்து அவருக்கு கிடைத்த பதவிகள் தான்!

2018 சட்டமன்ற தேர்தலில் கட்சி வெற்றி பெற்றது என்றால்,அது வசுந்தராஜே சிந்தியாவின் ஊழல் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட கடும் வெறுப்பு தான் முக்கிய காரணம்! ஆனால்,கட்சி வெற்றி பெற்றதே தன்னால் தான் என ஊடகங்களை பக்கம்,பக்கமாக எழுத வைத்து அவர் லாபி செய்து சச்சின் தான் முதல்வராகப் போகிறார் என எழுத வைத்தார். அப்போது தான் அகில இந்தியத் தலைமை விழித்துக் கொண்டது.
அசோக் கெலாட் இருமுறை ராஜஸ்தான் முதல்வராக இருந்தவர்! எளிமையான மக்கள் தலைவர்! இன்னும் சொல்வதென்றால், ’ராஜஸ்தானின் காந்தி’ என்று மக்கள் கொண்டாடும் அளவுக்கு செல்வாக்கானவர். அவர் தீடிரென்று தலைவரானவரல்ல! 1971 ல் வங்க அகதிகள் இந்தியாவில் குவிந்த போது அந்த முகாம்களுக்கு சென்று இரவு பகல் பாராமல் தொண்டாற்றியதன் மூலம் இந்திரா காந்தியின் கவனம் பெற்று படிப்படியாக இளைஞர் காங்கிரஸிலிருந்து முன்னேறியவர்!
தேர்தலில் அவரே முதல்வர் வேட்பாளர் என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை! அது தான் காங்கிரசின் வழக்கம்! 1967 தேர்தலில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட பெருந்தலைவர் காமராஜர் தான் முதல்வர் வேட்பாளர் என சொல்லப்படவில்லை! ஏனெனில் எல்லாம் ஜனநாயக முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நடைமுறை என்று விடப்பட்டது.(ஆனால்,அப்படி அறிவித்திருந்தால் பக்தவச்சலம் மீண்டும் வரப் போவதில்லை என நிம்மதி பெருமூச்சுடன் மக்கள் காங்கிரசை கரை சேர்த்திருக்கவும் வாய்ப்பிருந்தது) அந்தப்படியே ஜெயித்த பிறகு பெரும்பான்மையான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவில் அசோக்கெலாட் முதல்வரானார்.இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதல்வராகும் வாய்ப்பு பெற்றார்.
முதல்வர் ஆக முடியவில்லையே என்ற ஆத்திரம் சச்சின் பைலட்டை பொறுமையிழக்க வைத்துவிட்டது. அசோக் கெலட்டுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார். வெகு சீக்கிரமாக வெளிப்பட்டுவிட்டார்!
இப்படிப்பட்டவர்களை அள்ளிச் செல்லத் தான் பா.ஜ.க துண்டு போட்டு காத்திருக்கிறது.மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்திய சிந்தியா சிக்கினார். அது போல ராஜஸ்தானில் சச்சின் சிக்கிவிட்டார்! முன்னதாக சச்சினை பிரியங்கா அழைத்து பேசியதாகவும், அதில், ’’இரண்டரை வருடம் அவர் முதலமைச்சராக இருக்கட்டும்.அடுத்த இரண்டரை ஆண்டு என்னை முதல்வர் என பகிரங்கமாக தலைமை அறிவிக்க வேண்டும்’’ என்று சொன்னதாக செய்தி வெளியானது! ’அது நடக்காது’ என்றவுடன் நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.
ஆனால்,அவரால் இன்னும் காங்கிரசை கவிழ்க்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் சேரவில்லை என்பதால் கவர்னரும், பா.ஜ.க தலைமையும் காத்திருக்கிறார்கள். சபாநாயகர் தவிர்த்து 102 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவர்னர் மாளிகை வளாகம் வந்து ஐந்து மணி நேரம் காத்திருந்தும் அவர் அங்கிகரிக்க மறுக்கிறார்.
19 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கிறார்.அதில் நீதிமன்றம் தலையிட உரிமை இல்லை என்பது கர்நாடக சட்டமன்ற விவகாரத்தில் கூட நவம்பர் 2019 ல் நிருபணமானது! ஆயினும்,உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கின்றன! இந்த கால அவகாசத்தில் இன்னும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தூக்கவும், காங்கிரஸ் ஆட்சியை ஓய்க்கவும் பா.ஜ.க திறைமறைவு வேலைகளை செய்து கொண்டுள்ளது.
ஏற்கனவே, பா.ஜ.கவிடம் பேரம் பேசும் ஆடியோ டேப் வெளியாகிவிட்டது. அதில் இருவர் கைதாகியுள்ளனர். மத்திய அமைச்சர் இருவர் சம்மந்தப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. ஜனநாயகத்தை புதைகுழிக்குள் தள்ளும் பா.ஜ.கவின் இந்த கீழ்த்தரமான அரசியலை நாடு மன்னிக்காது. அதே சமயம் வாரிசுகள் என்பதாலேயே ஒருவருக்கு அதீத முக்கியத்துவம் தகுதியை மீறி தரக் கூடாது என்ற படிப்பினை தான் ஜி.கே.வாசன் தொடங்கி ஜோதிராதித்தியா சிந்தியா,சச்சின் பைலட் ஆகியோரின் துரோகத்தில் உணர வேண்டியதாகும்!
காங்கிரசில் இன்னும் ஐந்து,பத்து வருடங்கள் கூட காத்திருக்க முடியாத இவர்கள், இனி பா.ஜகவில் தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் தான் இருக்க முடியுமே தவிர அங்கு இவர்களின் முதல்வர் கனவு கானல் நீர் தான்! தலைவர் பதவியைக் கூட துறந்து ஒரு போராளியாய் தன்னை தகவமைத்து போராடிக் கொண்டிருக்கும் ராகுலைப் பார்த்தும் கூட இவர்கள் மாறவில்லை என்பது தன் துர் அதிர்ஷ்டம்!
நமது நாட்டில் எல்லா அரசியல்கட்சிகளிலும்,பொது வாழ்விலும் எத்தனையோ திறமையாளர்கள் தகுதி,திறமை, அர்ப்பணிப்பு ஆகிய பல தகுதிகள் இருந்தும் கடைசி வரை வாய்ப்பற்றவர்களாகவே வாழ்ந்து மறைகின்றனர்! ஆனால்,இந்த மாதிரி வாரிசுகளோ எவ்வளவு வாய்ப்பு பெற்றாலும் திருப்தியும் அடைய மாட்டார்கள், நன்றியும் பாராட்டமாட்டார்கள் என்பது தொடர்ந்து நிருபணமான வண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை: