மாலைமலர் : கர்நாடக அரசில் தலைமை மாற்றம்
ஏற்படப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் லட்சுமண் சவதிக்கு
முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு
தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக முதல்-மந்திரி
எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. அவர் பா.ஜனதாவில் மக்கள் செல்வாக்கு
மிகுந்த தலைவராக உள்ளார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்
சமூகத்தை சேர்ந்தவராக உள்ளார். அந்த சமூகம் தான் பா.ஜனதாவின் பலமாக உள்ளது.
குறிப்பாக வட கர்நாடகத்தில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.
அந்த வட கர்நாடகத்தில் பா.ஜனதா அசுர பலத்துடன் திகழ்கிறது.
பா.ஜனதாவில் 75 வயதானவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்படி தான்
பெரும் தலைவர்களாக இருந்த அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர்
ஓரங்கட்டப்பட்டனர்.
அவர்கள் அரசியலில் இருந்தே ஒதுங்கியுள்ளனர். ஆனால் 75
வயதை கடந்தாலும் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் நீடிக்கிறார். அதற்கு
அவருக்கு உள்ள மக்கள் செல்வாக்கு மற்றும் சாதி பலம் தான் காரணம் என்று
சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக
எடியூரப்பாவுக்கு பதிலாக அரசில் புதிய தலைமையை கொண்டுவர பா.ஜனதா மேலிடம்
முடிவு செய்துள்ளது. இதற்காக அக்கட்சி மேலிட தலைவர்கள் ரகசியமாக காய்
நகர்த்தி வருகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி
அடைந்த லட்சுமண் சவதிக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.
யாருமே எதிர்பார்க்காத அந்த விஷயத்தை கண்டு எடியூரப்பாவே சற்று ஆச்சரியம் அடைந்து போனார். அது கட்சி மேலிடத்தின் முடிவு என்பதால் எடியூரப்பா உள்பட யாருமே அதுபற்றி வாய் திறக்கவில்லை. தோற்றவருக்கு துணை முதல்-மந்திரி பதவியா“ என்று எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, உமேஷ்கட்டி உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மேலிடத்தின் முடிவு என்பதால், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா அரசு பதவி ஏற்று ஓராண்டு ஆனதையொட்டி நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சாதனை விளக்க கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் பங்கேற்றனர். ஆனால் லட்சுமண் சவதி மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் டெல்லி சென்றுவிட்டார். அங்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து, தனது துறை தொடர்பாக ஒரு கடிதத்தை கொடுத்தார்.
ஆனால் அவரது டெல்லி பயணத்தின் நோக்கம் அரசியல் சார்ந்தது என்று தற்போது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. எடியூரப்பாவை நீக்கிவிட்டு லட்சுமண் சவதியை முதல்-மந்திரி பதவியில் அமர்த்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேச டெல்லியில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் பணிகளை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி மேற்கொண்டுள்ளார். இங்கு அவர் முக்கியமான எம்.எல்.ஏ.க்களை சந்தித்து, எடியூரப்பா மாற்றம் குறித்தும், லட்சுமண் சவதிக்கு கட்சி மேலிடம் முதல்-மந்திரி பதவி வழங்க திட்டமிட்டுள்ளது குறித்தும் எடுத்துக்கூறி ஆதரவு பெற்று வருவதாக கூறப்படுகிறது. பா.ஜனதாவில் நடைபெற்று வரும் இந்த அரசியல் நகர்வுகளால், விரைவில் அரசின் தலைமையில் மாற்றம் ஏற்படப்போகிறது என்று சொல்லப்படுகிறது.
லட்சுமண் சவதிக்கு பா.ஜனதா மேலிடத்தில் பலமான ஆதரவு இருப்பதாகவும், அதனால் அவருக்கு தேர்தலில் தோல்வி அடைந்தபோதும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதே லிங்காயத் சமூகத்தை சேர்ந்த லட்சுமண் சவதிக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதால், எடியூரப்பாவை மாற்றினாலும் அந்த சமூகத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடாது என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள். அடுத்து வரும் நாட்களில் கர்நாடக அரசியலில் பரபரப்பான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடியூரப்பா அமைதியாக பதவியை விட்டு செல்வாரா அல்லது பிரச்சினையை கிளப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது பா.ஜனதா மேலிடம் சர்வ பலம் பொருந்தியதாக இருப்பதால், எடியூரப்பா பிரச்சினையை கிளப்பினாலும் அதை எளிதாக சமாளித்துவிடலாம் என்று அக்கட்சியின் பிற தலைவர்கள் கருதுகிறார்கள். ஆனால் லட்சுமண் சவதிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அவ்வளவாக ஆதரவு இல்லை என்றே சொல்லப்படுகிறது. அடுத்த முதல்-மந்திரி லட்சுமண் சவதி என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகியுள்ளது.
2008-13-ம் ஆண்டில் எடியூரப்பா முதல்-முறையாக முதல்-மந்திரியாக பதவியில் இருந்தபோது அவரது மந்திரிசபையில் லட்சுமண் சவதி கூட்டுறவுத்துறை மந்திரியாக பணியாற்றினார். அப்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த புகாரை அடுத்து லட்சுமண் சவதி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக