புதன், 29 ஜூலை, 2020

தியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்தை வரை!

 மின்னம்பலம் :  கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மார்ச் 22 ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. முழுதாக நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு 1 முதலான அடுத்த ஊரடங்குத் தளர்விலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
என்னதான் அமேசான், ஓடிடி என்று செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் சினிமா பார்த்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்த்து வரும் அனுபவத்தை இந்தத் தொழில் நுட்பங்கள் ஈடுகட்டப் போவதில்லை.இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொழுதுபோக்கு என்றால் சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்களுக்கு தியேட்டர்கள் திறப்பு என்பது முக்கியமான வர்த்தகப் பிரச்சினையாகிவிட்டது. நான்கு மாதங்களாக தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகளை செய்ய வேண்டும். ஆனால் தியேட்டரை திறக்க இயலாத நிலையில் பற்பல தியேட்டர்களை வைத்திருக்கும் பெரு நிறுவனங்களே திணறி வருகின்றனர். பங்குச் சந்தை வரைக்கும் இவர்களது சரிவு எதிரொலிக்கிறது.இந்தியாவில் முக்கியமான தியேட்டர் நிறுவனமான பிவிஆர் நிறுவனத்தின் பங்குகள் 2020 பிப்ரவரி மாதம் அதற்கு ஒரு வருடம் முன் இல்லாத உயர்வை எட்டி ஒரு பங்கு 2,082 ரூபாய் மதிப்பில் இருந்தது. ஆனால் மார்ச் 22 முதல் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் அடுத்த மூன்றே மாதங்களில் பங்குகளின் மதிப்பு மிகக் குறைந்தது. பிவிஆரின் பங்கு 2020 மே மாதம் 706 ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ந்தது. இந்த நிலையில் ஆகஸ்டு 1 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற ஒற்றைத் தகவலால்.... பிவிஆரின் பங்குகள் திடீரென 6% அதிகரித்து 1,172 ரூபாய் ஆக உயர்ந்திருக்கிறது. ஆகஸ்டு 1 இல் ஒருவேளை தியேட்டர்கள் திறப்பு இல்லையென்றால் பங்கு மேலும் சரியும்.

பிவிஆர் நிறுவனம், மல்டிபிளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த அமைப்பின் மூலம் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் பிவிஆர் நிறுவன தரப்பில் பேசியிருக்கிறார்கள். ‘தியேட்டர்கள் இனியும் மூடப்பட்டுக் கிடந்தால் சினிமா தொழில் அதை ஒட்டிய தொழில், தியேட்டர்கள், அதை ஒட்டிய வர்த்தகங்கள் என்று பல்வேறு திசைகளிலும் பொருளாதார பாதிப்பு அதிகமாகும். எனவே, நிலையான நிபந்தனைகளை உருவாக்கி அதன் அடிப்படையில் தியேட்டர்களைத் திறக்கச் செய்யலாம் என்று மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் அமைப்பு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளனர். இதன்படி கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக காகிதமில்லா சினிமா டிக்கெட், சமூக இடைவெளியுடனான இருக்கை அமைப்புகள், ஏசி இல்லாமை, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் ஆகிய நிபந்தனைகளைப் பின்பற்றத் தயார் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகமும் உள்துறைக்கு குறிப்பு அனுப்பியுள்ளது. இந்தக் குறிப்பின் விளைவாகத்தான் தியேட்டர் நிறுவனப் பங்குகள் திடீரென ஏறுமுகம் காட்டியுள்ளன.

ஆனாலும் மாநகரங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று இப்போது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள் மாவட்டங்களிலும் பரவி வரும் சூழலில் ஆகஸ்டு மாதமும் தியேட்டர்கள் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “பிவிஆர் போன்ற பெரு நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தபோதும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு வேளை தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தால் கூட மாநில அரசுகள்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு ஆகஸ்டு 31 ஆம் தேதிக்கு பிறகே இருக்கும்.

இன்னொரு பக்கம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதில் திரையிடுவதற்கு புதிய படங்கள் தயாராக இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். சினிமா படப் பிடிப்புகள் நடந்து முழுதாக ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. பல படங்கள் பூஜையுடன் நிற்கின்றன. தயாராக இருந்த சில படங்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டுவிட்டன. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள் அப்படியே பாதியில் நிற்கின்றன. இந்த நிலையில் தியேட்டர்கள் திறந்து என்ன செய்வது?” என்றும் கேட்கிறார்கள்.

-வேந்தன்


கருத்துகள் இல்லை: