புதன், 29 ஜூலை, 2020

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை

சதீஷ் பார்த்திபன் - பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முன்னதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருந்தது.
நஜிப் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
எம்டிபி (1MDB) எனப்படும் மலேசிய மேம்பாட்டு நிதியத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் நிதியில் இருந்து சுமார் 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்பதே நஜிப் துன் ரசாக் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு ஆகும்.
நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.இந்த தீர்ப்பின் காரணமாக மலேசிய அரசியல் களத்தில் அதிரடித் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2018ஆம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக நஜிப் பதவி வகித்தார். அதே ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் 1எம்டிபி (1MDB)எனப்படும் மலேசிய வளர்ச்சி நிதியம். இதன் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், எஸ்ஆர்சி எமரிட்டஸ் ஆலோசகராகவும் அவர் பொறுப்பு வகித்தார். மேலும் மலேசிய நிதி அமைச்சராகவும் அவர் பதவியில் இருந்தார்.

எஸ்ஆர்சி நிறுவனம் தொடக்கத்தில் 1எம்டிபியின் துணை நிறுவனமாக தோற்றுவிக்கப்பட்டது. எனினும் பின்னர் சில காரணங்களால் அது மலேசிய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் எஸ்ஆர்சி நிறுவனத்தில் இருந்து நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மாற்றப்பட்டது. இதுவே அவர் பிரச்சினையில் சிக்க காரணமாக அமைந்தது. இது தொ டர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது அன்றைய அரசுத் தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


மேலும் 1எம்டிபியின் செயல்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு ஆட்பட்டன. பல பில்லியன் ரிங்கிட் அளவுக்கு மலேசிய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சாடின.

1எம்டிபி மூலம் நஜிப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு மகாதீரும் அன்வாரும் தலைமையேற்று மேற்கொண்ட தீவிர பிரசாரத்தை அடுத்து, நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி 2018 பொதுத்தேர்தலில் தோல்வி கண்டது.

கடந்த 1957ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேசிய முன்னணி முதன்முறையாக ஆட்சியைப் பறிகொடுத்தது.

>2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை நாட்டின் பிரதமராக நஜிப் பதவியில் இருந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தவர் மீது நம்பிக்கை மோசடி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

மலேசிய வரலாற்றில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது பிரதமர் இவர்தான்.

மேலும், இத்தீர்ப்பின் மூலம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும். இதன் மூலம் இன்றைய ஆளும் பெரிக்கத்தான் கூட்டணிக்கும் பின்னடைவு ஏற்படும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

ஏனெனில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. ஆளும் கூட்டணிக்கு 111 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. நஜிப் துன் ரசாக்கின் எம்பி பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு என அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1எம்டிபி எனப்படும் மலேசிய வளர்ச்சி (மேம்பாட்டு) நிதியம் (1Malaysia Development Berhad)என்ற நிறுவனம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த நிதியம் வழி 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை மோசடி செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. மலேசிய நிதியமைச்சின் கீழ் இந்நிதியம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த முணுமுணுப்புகள் எழுந்தன. அந்த ஆண்டு வால் ஸ்டிரீட் ஜெர்னல் பத்திரிகையில் 1எம்டிபியில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

அச்சமயம் மலேசிய பிரதமராக இருந்த நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டதாக அப்பத்திரிகை செய்தி தெரிவித்தது. அத்தொகை 1எம்டிபிக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டது.

இதையடுத்தே மலேசியாவில் இந்த முறைகேடு விவகாரம் பூதாகரமானது. நாடு முழுவதும் 1எம்டிபி முறைகேட்டில் பிரதமருக்குப் பங்குள்ளதா? எனும் விவாதங்கள் எழுந்தன.

குறிப்பிட்ட பத்திரிகை மீது வழக்கு தொடுக்கப்போவதாக நஜிப் தரப்பு எச்சரித்தது. அதற்குள் இந்த விவகாரம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியானதையடுத்து நஜிப் கடும் நெருக்கடிக்கு ஆளானார்.

மேலும் இந்த முறைகேடுகளில் நஜிப்பின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் வர்த்தகர் ஜோ லோ என்பவருக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. முறைகேடு மூலம் திரட்டப்பட்ட பெருந்தொகையை ஜோ லோ பல்வேறு நாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள இவரை மலேசிய காவல்துறை தேடி வருகிறது.

இதற்கிடையே இந்த முறைகேடு தொடர்பாக எதிர்க்ட்சிகள் மேற்கொண்ட பிரசாரம் காரணமாக நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி தேர்தலில் தோல்வி கண்டது. மலேசியாவின் பிரதமராக மகாதீர் மொஹம்மத் மீண்டும் பொறுப்பேற்றதும் 1எம்டிபி முறைகேடு தொடர்பான வழக்குகள் உடனுக்குடன் பதியப்பட்டு விசாரணையும் தொடங்கியது.

இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கு தவிர, 1எம்டிபி தொடர்பான மேலும் ஐந்து ஊழல் வழக்குகளையும் நஜிப் எதிர்நோக்கியுள்ளார். அதில் முதல் வழக்கான 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சியின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கு விசாரணை கடந்த மாதம் முடிவடைந்தது.

’மலேசியாவின் ஆகப்பெரிய ஊழல் இது’

1எம்டிபி முறைகேடு என்பது மலேசியாவில் நிகழ்ந்துள்ள ஆகப்பெரிய ஊழல் என கருதப்படுகிறது. இந்நிறுவனத்தில் நஜிப் ஆதரவோடு பல பில்லியன் தொகையிலான ஊழல் நடந்திருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக எஸ்ஆர்சி நிறுவன வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில், நஜிப் சார்பில் மேல் முறையீடு செய்வதற்காக நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். எனினும் அரசுத்தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

நஜிப்புக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து நீதிமன்றம் விரைவில் அறிவிக்க உள்ளது.

கருத்துகள் இல்லை: