செவ்வாய், 28 ஜூலை, 2020

ஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் !

மின்னம்பலம் :ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது எனவும், இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் தீர்ப்பளித்தது.இதுதொடர்பாக குழு அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செல்லக்கூடாது என வலியுறுத்தினர். இந்த நிலையில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று (ஜூலை 28) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது” என்று வலியுறுத்தியுள்ளது.

இதுபோலவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கட்சிகளும் கேவியட் மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இடஒதுக்கீடு தொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது...>எழில்</

கருத்துகள் இல்லை: