வியாழன், 30 ஜூலை, 2020

ராணுவத்தின் பலம் கூடுகிறது! வந்தன ரபேல் விமானங்கள்.. தினமலர் ..

தினமலர் : புதுடில்லி: ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட,
ஐந்து ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப்படை தளத்துக்கு, நேற்று வந்தடைந்தன.
'இதன் வாயிலாக, நம் ராணுவத்தின் பலம் கூடியுள்ளதுடன், விமானப்படை வரலாற்றில், புதிய சகாப்தம் துவங்கி உள்ளது' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாயில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016, செப்., 23ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு அக்டோபரில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார். அவரிடம், முதல் ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின், மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள், 27ம் தேதி இந்தியா புறப்பட்டன. ஏழு மணி நேரப் பயணத்துக்குப் பின், ஐக்கிய அரபு எமிரேட்சின், அல் தப்ரா விமானப்படை தளத்தில் தரை இறக்கப்பட்டன. பின், அங்கிருந்து புறப்பட்டு, ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, நம் விமானப்படை தளத்தை, நேற்று மதியம் வந்தடைந்தன.
பிரான்சில் இருந்து, 7,000 கி.மீ., துாரத்தை கடந்து வந்த போர் விமானங்களுக்கு, வானில், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே, எரிபொருள் நிரப்பப்பட்டன. ரபேல் விமானங்கள், இந்திய வான்வெளியை வந்தடைந்ததும், இரண்டு 'சுகோய் 30 எம்.கே.ஐ. எஸ்' போர் விமானங்கள், அவற்றை வரவேற்று அழைத்து வந்தன. வெற்றிகரமாக தரை இறங்கிய விமானங்கள், அம்பாலா விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை, நமது விமானப்படையில் சேர்த்துக் கொள்ளும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஐந்து ரபேல் போர் விமானங்கள், பாதுகாப்பாக, அம்பாலா வந்தடைந்தன. இதன் வாயிலாக, நமது ராணுவத்தின் பலம் கூடியுள்ளதுடன், விமானப்படை வரலாற்றில், புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. இது, நம் படை திறனில், நிச்சயம் புதிய புரட்சியை ஏற்படுத்தும். 'நம் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்களுக்கு, இந்த புதிய வரவு நிச்சயம் கவலையை ஏற்படுத்தும்' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தன், 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டார்.

இது குறித்து, மத்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: இதுவரை, 10 ரபேல் விமானங்கள், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அதில், ஐந்து விமானங்கள், பயிற்சிக்காக, பிரான்சிலேயே உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள், 36 விமானங்களும், படையில் சேர்க்கப்பட்டு விடும். ரஷ்யாவிடம் இருந்து, சுகோய் போர் விமானங்கள் வாங்கி, 23 ஆண்டுகள் ஆகின்றன. அதன் பிறகு, அதிநவீன போர் விமானங்கள் வாங்குவது, இதுவே முதல் முறை.

ரபேல் விமானங்கள், வானில் பறக்கும் போதே, மற்றொரு விமானத்தை துல்லியமாக தாக்கவும், தரையில் தொலைதுார இலக்குகளை, குறிவைத்து தாக்கும் வல்லமையும் கொண்டவை.ஒரு விமானம், 10 ஆயிரம் கிலோ ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் வாய்ந்தது. மணிக்கு 1,000 கி.மீ., வேகத்தில் பறக்க கூடியது. போர் கப்பல்களில் தரை இறங்கவும், நினைத்த இடத்தில் வேகத்தை குறைத்து தரை இறங்கும் திறன் படைத்தது.

இதில் பயன்படுத்துவதற்காகவே, 'ஸ்கால்ப் குரூஸ், ஹாமர்' போன்ற, அடுத்த தலைமுறை நவீன ஏவுகணைகளை, பிரான்சில் இருந்து வாங்க உள்ளோம். மொத்தமுள்ள 36 விமானங்களில், 30 விமானங்கள், போர் விமானங்களாகவும், ஆறு, பயிற்சி விமானங்களாகவும் பயன்படுத்தப்பட உள்ளன. போர் விமானங்கள் ஒருவர் அமரக் கூடியதாகவும், பயிற்சி விமானங்கள், இருவர் அமரக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


'சீனாவால் இனி நம்மை நெருங்கக் கூட முடியாது'

விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி, பி.எஸ்.தானோ கூறியதாவது: உலகின் தலைசிறந்த போர் விமானமான ரபேலில், நம் பார்வைக்கு அப்பாற்பட்ட இலக்கை கூட துல்லியமாக தாக்கும் திறன் உள்ளது. எனவே, சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்களை, நாம் எளிதில் சமாளிக்க முடியும். சீனா, ஐந்தாம் தலைமுறை, 'ஜெ--20' போர் விமானங்களை கொண்டு, நம்மை அச்சுறுத்தி வருகிறது. இனி, ரபேல் போர் விமானங்களை, அவர்களால் நெருங்க கூட முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.


கடற்படையின் வரவேற்பு:

ரபேல் விமானங்கள், அம்பாலா நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அவை அரபிக் கடல் பகுதியை அடைந்ததும், நமது போர் கப்பலான, ஐ.என்.எஸ்., கோல்கட்டா, அதை வரவேற்றது. கப்பல் படை வீரரும், ரபேல் விமானத்தை ஓட்டி வந்த நமது விமானப் படை விமானியும், 'வயர்லெஸ் ரேடியோ' வாயிலாக உரையாடினர். அப்போது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


அமித் ஷா வாழ்த்து:

மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரபேல் விமான வருகை, நமக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்தியா பெருமை கொள்ள வேண்டிய நேரமிது. உலகின் சக்தி வாய்ந்த இந்த போர் விமானங்கள், வானில் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள கூடிய திறன் கொண்டவை. நம் வான்வெளியை பாதுகாப்பதில், நம் வீரர்கள், முன்பை விட, அதிக ஆளுமையுடன் செயல்பட முடியும். நம் விமானப் படைத் திறனில், மிகப் பெரிய மாற்றத்தை, ரபேல் உருவாக்கும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


பிரதமர் மோடி சமஸ்கிருதத்தில் வாழ்த்து:

ரபேல் போர் விமான வருகை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், சமஸ்கிருதத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதன் விபரம்:தேசத்தை காப்பது போன்ற நற்குணம் இல்லை. தேசத்துக்கு பாதுகாப்பாய் இருப்பதை தவிர, சபதம் வேறில்லை.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: