சனி, 1 ஆகஸ்ட், 2020

குஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெளியேற போகிறார்?

தினகரன் : சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்றதால் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் இடையே டிவிட்டரில் வார்த்தை மோதல் ஏற்பட்டிருப்பது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக காங்கிரஸில் தீவிரமாக இயங்காமல் ஒதுங்கியே இருந்தார் குஷ்பு. இந்நிலையில்  காங்கிரஸ் பேச்சாளர் சஞ்சய் ஜா, ‘‘ராகுலுக்கு பதிலாக சச்சின் பைலட் அல்லது பாஜவுக்கு சென்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கியிருக்கலாம்’’ என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு, ‘கிளிப்பிள்ளை போல சிலர் சாவி கொடுத்து பேச வைக்கப்படுகின்றனர்’ என்று சாடியிருந்தார்.  அப்போது இவர்களின் டிவிட்டர் பதிவுகளுக்கு கமெண்ட் கொடுத்த இளைஞர் காங்கிரசார் பலர் குஷ்பு பாஜ அல்லது வேறு கட்சிக்கு  செல்வதற்காக இவ்வாறு பதிவிடுகிறார் என்று குற்றம்சாட்டினர்.   இதற்கிடையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருப்பது தமிழக காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘புதிய கல்வி கொள்கையில் சில இடங்களில் குறை இருப்பினும், இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்.

எதிர்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பது. ஒன்றிணைந்து செயல்படுவதே அரசியல். இதனை பாஜ புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் பாஜவில் இணைவேன் என்பதில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.  இந்த பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டிவிட்டர் பதிவில், ‘காங்கிரசில் கருத்து சொல்ல உரிமை உண்டு. கட்சியின் அமைப்புக்குள் அதைபற்றி பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதற்கு  பெயர் முதிர்ச்சியின்மை’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

உடனே குஷ்பு, ‘வேலை வெட்டி இல்லாமல்  இருந்து சும்மாவே இருந்தால் இப்படி எல்லாம்  யோசிக்க தோன்றும். அவர்கள் எல்லாம் இதிலிருந்து குணமாகி வெளியில் வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்த பதிவு கே.எஸ்.அழகிரிக்குத்தான் என காங்கிராசர் தெரிவிக்கின்றனர்.  சமூக வலைதளங்களில் அரங்கேறியுள்ள இந்த மோதல் போக்கு கட்சியினர் மத்தியில் பரவத் தொடங்கியுள்ளது. கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் குஷ்புவுக்கு  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

கருத்துகள் இல்லை: