ஞாயிறு, 26 ஜூலை, 2020

வீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகிழ்ச்சி!

முழு கொள்ளளவை எட்டிய வீராணம்: விவசாயிகள் மகிழ்ச்சி!மின்னம்பலம் : காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரி நிரம்பியது பற்றி அறிந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோமீட்டர் நீளம், 5.6 கிலோமீட்டர் அகலம், 48 கிலோமீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது.

ஏரிக்குச் சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும் அளவை பொறுத்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
இந்த நிலையில் கடந்த மாதம் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. சராசரியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 25) வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதையடுத்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மூலம் விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரி நிரம்பியது பற்றி அறிந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: