புதன், 14 நவம்பர், 2018

கமல ஹாசன் :"பிச்சைக்காரர்களுக்கு தான், இலவசம் தேவை" விடியோ


நவீன தீண்டாமை ஒழிப்புசமூக சமத்துவம்இலவசம் என்பதே இல்லையேtamil.oneindia.com - veerakumaran :  சென்னை: "பிச்சைக்காரர்களுக்கு தான், இலவசம் தேவை" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், கமல்ஹாசன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை தீயிட்டு எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அந்த காட்சியை மறு தணிக்கை செய்து நீக்கி விட்டனர் படக்குழுவினர்.
இருப்பினும் தற்போது சமூகவலைத்தளங்களில், வீட்டிலுள்ள இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போட்டு எரிப்பது, உடைப்பது போன்றவற்றை வீடியோவாக எடுத்து அதை பரப்பி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். பிச்சைக்காரர்களாம் : அரசு வழங்கும் இலவச பொருட்கள் என்பது அவசியமா, அனாவசியமா பட்டிமன்றத்திற்கு இந்த திரைப்படம் வழிகோலியுள்ளது. இதனிடையே, வணிகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை என்று பதில் தெரிவித்துள்ளார். அரசின் இலவச திட்டங்களால் பயனடைந்தோரை, இழிவு படுத்துவதைப் போல கமல்ஹாசன் பேச்சு உள்ளது என்று கண்டன குரல்கள் எழுந்துள்ளன.




மேல்தட்டு மனோபாவம் : கமல்ஹாசனின் பேச்சு என்பது, மேல்தட்டு மனோபாவம் அல்லது முதலாளிகளின் குரல் என்கிறார்கள், சமூக நலத்திட்டங்களுக்கு ஆதரவானவர்கள். கமல்ஹாசன் தெரிந்துதான் பேசினாரா அல்லது அறியாமல் பேசிவிட்டாரா என்பதுதான், புரியவில்லை என்கிறார்கள் அவர்கள்.




இலவசம் என்பதே இல்லையே

முதலில், இலவசம் என்று ஒரு பதம் பயன்படுத்தப்படுவதே தவறு .. இலவசமாக யாரும் தனது சொந்தக் காசில் இருந்து மக்களுக்கு எதையும் செய்துவிடவில்லை.. அரசின் கஜானாவில் இருந்து எடுக்கப்படும் பணத்திலிருந்து கொடுக்கப்பட்டதுதான், இலவச வண்ண தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை. நமது வரிப்பணம் தான் மறு வடிவத்தில் நமக்கே திரும்பி வந்துள்ளது . இதில் எங்கே இருக்கிறது இலவசம்?



கூட்டுக்குடும்பம் : அரசாங்கம் என்பது ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் போன்றது . எவ்வாறு ஒரு குடும்பத்தில் சம்பாதிப்பவர்கள், குடும்பத்திலுள்ள படித்துக்கொண்டிருக்கும் அல்லது வருவாய் ஈட்ட முடியாத பிறருக்காக, பணத்தை செலவிடுவார்களோ, அதைப்போன்றுதான், சமூகத்தில், செல்வந்தர்களிடமிருந்து பெறப்படும் வரி, சாமானியர்களுக்கு செலவிடப்படுகிறது. சாமானியருக்கு செய்யப்படும் சமூக நீதிக்கான திட்டங்கள் நிறுத்தப்பட்டால், கூட்டுக் குடும்பம் போல இருக்கும் இந்த சமூக கட்டமைப்பு உடைந்து சிதறிவிட்டது என்று அர்த்தம்.




இலவசம் கொடுக்காவிட்டால் வளருமா? : இலவசம் கொடுத்துக் கொண்டிருந்தால் போதுமா? அவர்களை அந்த பொருட்களை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு இந்த கட்சிகள் வளர்த்தெடுத்து இருக்க வேண்டாமா..? என்று கேட்போர் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். இலவச திட்டங்கள் வழங்காமல் இருந்த பீகாரும், உத்தரபிரதேசமும், இலவசங்கள் வழங்கிய தமிழகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிக வளர்ந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பல்வேறு சமூக, பொருளாதார குறியீடுகளில் தமிழகமே முன்னேறிய மாநிலமாக உள்ளது எப்படி?




நவீன தீண்டாமை ஒழிப்பு : வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி பெட்டி இருக்கும் ஓரளவுக்கு வசதியானவர்களின் வீட்டு வாசலில் சென்று நின்று டிவி பார்க்க காத்திருந்த அனுபவம் வாய்க்கப் பெற்றவர்கள், தங்கள் வீட்டில் இலவச தொலைக்காட்சி கொடுக்கப்பட்ட போது கடவுளே வானத்திலிருந்து வரம் கொடுத்ததை போல உணர்ந்திருப்பார்களே! டிவியில், நல்ல காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சி பெட்டியை ஆப் செய்துவிட்டு, "நாங்கள் சாப்பிடப் போகிறோம், வெளியே போங்கள்" என்று டிவி வீட்டு உரிமையாளர் சொல்லும்போது இயலாமையின் வலியை சுமந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியே செல்லும் இளம் தலைமுறையை இப்போது பார்க்க முடிகிறதா? இந்த இலவசம், நவீனகால தொலைக்காட்சி தீண்டாமையை ஒழித்து விட்டதே.. இது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?




சமூக சமத்துவம் : ஓரளவு வசதியான குடும்பத்தினருக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையிலிருந்த, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை, ஒடுக்கப்பட்டவர்கள் வீட்டிலும், ஏழை, எளியவர்கள் வீட்டிலும் இருக்கும்போது, அங்கு, சமூக சமத்துவம் நிலை நாட்டப்பட்டுவிட்டதே, இதை நீங்கள் கவனிக்கவில்லையா கமல்? இலவச லேப்டாப் மூலமாக தமிழக மாணவர்கள் சமூகத்தில் கணினி நீக்கமற கலந்துவிட்டது. பிற மாநில மாணவர்கள் இதை வியப்போடு உற்று நோக்குவது உங்களுக்கு தெரியுமா? நாளைய, தகவல் தொழில் நுட்ப புரட்சி உலகத்தில் போட்டி போடுவதற்கான பயிற்சியாயிற்றே இந்த இலவசம். பிற மாநிலங்களை ஒப்பிட்டால், தொலைதொடர்பு துறையில், இனி, நமது மாணவர்கள் தான் முன்னால் ஓடிக் கொண்டிருப்பார்கள். இது எதிர்காலத்திற்கான முதலீடு இல்லையா?




இலவச சிகிச்சையா, முதலீடா? : இந்தியாவிலேயே சிறப்பான சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள், கொண்டது தமிழகம். இங்கு வழங்கப்படும் இலவச சிகிச்சையால், தொழிலாளர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு அவர்களின் உழைப்புத் திறன் தக்க வைக்கப்படுகிறதே.. பொருளாதார வளர்ச்சிக்கு அது முதலீடு கிடையாதா? இலவசம் என்பற்காக, அரசு மருத்துவமனைகளை மூடிவிட்டு, பணம் கறக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளை மட்டும் செயல்பட செய்ய வேண்டுமா? இதைத்தான் கமல்ஹாசனும் விரும்புகிறாரா?




பிரிட்டன் என்றால் ஓகேவா?: உலகை ஆண்ட பிரிட்டன் நாட்டில், தேசிய சுகாதார சேவை ((National Health Service) என்ற பெயரில் அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது .அவமானகரமானது என்று நினைத்திருந்தால் உலகை கட்டியாண்ட, பெரியண்ணன், பிரிட்டன் இந்த திட்டத்தை கொண்டு தான் வந்திருக்குமா? இங்கிலாந்தில் இலவச சிகிச்சை அளித்தால் அது வளர்ச்சி.. இந்தியாவில் கொடுக்கப்பட்டால் அது பிச்சைக்காரத்தனம் என்பதா? இது அடிமை மனப்பான்மையின்றி வேறென்ன? ரேஷன் மானியம், உர மானியம் என அனைத்தையும் ஒழித்துவிட்டு, பன்னாட்டு முதலாளிகள் பிடிக்குள், ஏழைகளை கொண்டு சென்று நசுக்கும் கொள்கை கொண்ட, வலதுசாரி கட்சி தலைவரிடமிருந்து வரும் வார்த்தைகளை, ஏழைகளின் காவலனாக காட்டிக்கொண்ட உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லையே கமல் சார்!

கருத்துகள் இல்லை: