திங்கள், 12 நவம்பர், 2018

எம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம்? திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி

tamil.indianexpress.com : ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அரசியல் கட்சி ரெண்டு பட்டால், பல அந்தரங்க ரகசியங்கள் அம்பலத்திற்கு வரும்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே வெடித்திருக்கும் மோதலும் அப்படி சில ரகசியங்களை பந்தி வைக்காமல் ஓயாது போல!
பணமதிப்பிழப்பு அமலாக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடித்து, கடந்த நவம்பர் 9-ம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விஜயதரணி, குமரி அனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் இளங்கோவனை மறைமுகமாக விமர்சித்து, திருநாவுக்கரசர் கூறிய சில கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வை கண்டித்து ஒருசில வார்த்தைகளை உதிர்த்த திருநாவுக்கரசர், “எங்கப்பா காங்கிரஸ்காரன், மாமா காங்கிரஸ்காரன். உங்கப்பா, உங்கம்மா காங்கிரஸ் கட்சி இல்லையே. இதையெல்லாம் நான் கேட்கறேனா? இனிமே என்னை விமர்சனம் பண்ணா கேட்பேன். டெல்லில ஒன்னுமே கண்டுக்க மாட்டாங்க, இவங்களா பேசிக்கட்டும்னு விட்டுட்டாங்க. நாமளே பேசி செட்டில்மென்ட்க்கு வந்துடுவோம்.
சும்மா இருக்கேன்ங்கறதுக்காக ஏதாவது பேசிட்டே இருந்தா, நான் சும்மா இருக்க முடியாது. இவங்களை ஒன்னு டெல்லி கண்டிக்கனும், இல்லை நான் தான் கண்டிக்கனும். என் மேல எச்சிய துப்பிட்டே இருப்பாங்க, நான் வெறுமனே துடைச்சுட்டு மட்டுமே இருப்பேனா?” என்று பெயரை குறிப்பிடாமல் ஒருவரை கடுமையாக அர்ச்சித்தார்.
அர்ச்சனைக்கு உள்ளான நபர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் என்பது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அடிமட்ட தொண்டனுக்கும் தெரிந்திருந்தது.
ஈ.வி.கே.எஸை தாக்குவதற்காக, அவரது தந்தை சம்பத், தாத்தா முறை வரும் தந்தை பெரியார் ஆகியோரையும் வம்பிற்கு இழுத்திருந்தார் திருநாவுக்கரசர். இதன் ரியாக்‌ஷன் நவம்பர் 11-ம் தேதி அறிக்கை வடிவில், ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்களிடமிருந்து வந்துள்ளது.
அதில், “சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத்தையும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு என்ன அருகதை இருக்கிறது? தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக, பொதுச்செயலாளராக பணியாற்றிய பட்டித் தொட்டி எங்கும் காங்கிரஸ் கொள்கைகளை முழங்கியவர் சம்பத். குடும்பச் சொத்துக்களை விற்று பொதுவாழ்க்கைக்கு செலவு செய்தார்களே தவிர, அரசியலிலோ, பொதுவாழ்விலோ ஒரு ரூபாய் கூட சம்பாதிக்காத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை. ஒரே நபர் பதவி சுகத்திற்காக, விசுவாசமும், நன்றியும் இல்லாமல் பல கட்சிகளுக்கு போவது தான் கேவலமான செயல்.
பதவிக்காக தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு அவர்களின் வரலாறு தெரிய வாய்ப்பில்லை. தந்தை பெரியார் பற்றி பேச திருநாவுக்கரசருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
எங்களது தன்மானத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது இனிமேலும் தரமற்ற விமரசனங்களை செய்தால், வீட்டுவசதித்துறை அமைச்சராக திருநாவுக்கரசர் இருந்தபோது, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த இரவு அன்று என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விபரங்களை எல்லாம் வெளியிட நேரிடும்” என்று கொதித்துள்ளனர்.
இவ்வறிக்கை, ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்களான ஏ.பி.சி.வி.சண்முகம், என்.ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்தராஜ் ஆகியோரின் பெயர்களில் வெளிவந்துள்ளது.
சரி, எம்.ஜி.ஆர். இறந்த நாளில் அப்படி என்னதான் நடந்தது? என ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் வாயைக் கிளறினோம். அதற்கு அவர்கள், ‘திருநாவுக்கரசர் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் என்பதை எங்களது அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.
அதில் சொல்லாத ஒரு ரகசியம், எம்.ஜி.ஆர். இறந்த அன்று விடிய விடிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்ந்த பல்வேறு அனுமதிகளுக்கு அரசு சார்பில் கையொப்பமிட்டு அனுமதி வழங்கப்பட்டதா, இல்லையா? என்பதை விசாரியுங்கள். அதில் புரண்ட தொகை, மிகப் பெரியது என்பது அந்தக் கால அரசியல்வாதிகளுக்கு தெரியும். அப்படி விடிய விடிய தீவிர பணி செய்ததால், காலையில் எம்.ஜி.ஆர். அஞ்சலிக்கு தாமதமாக வந்தவர்களையும் அந்தக் கட்சியின் முன்னணியினருக்கு தெரியும்.’ என பொடி வைத்துப் பேசினார்கள், இளங்கோவன் ஆதரவாளர்கள்.
திருநாவுக்கரசர் தரப்பு இன்னும் சீண்டினால், இது குறித்து வெளிப்படையாக இளங்கோவன் ஆதரவாளர்கள் பேசுவார்களாம். பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை: