புதன், 14 நவம்பர், 2018

ரஜினி :10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் ... பாஜக பலசாலியாம்


 மின்னம்பலம்:  எழுவர் விடுதலை தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது என்ற மாயையை
உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டிய நடிகர் ரஜினிகாந்த், “பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் 10 நிமிடங்களுக்கு மேல் போனில் பேசியுள்ளேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், எழுவர் விடுதலை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, “எந்த ஏழு பேர்?” என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். மேலும் பாஜக ஆபத்தான கட்சி என்று பொருள்படும் பதிலையும் அளித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (நவம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “எழுவர் தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது என்ற மாயயை உருவாக்குகிறார்கள். இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி தெளிவாக இல்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கொடுத்த கடிதம் என்று கூறியிருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் விடுதலை என்று சொன்னால் எந்த ஏழு பேர் என்றுதானே கேட்க முடியும். அதற்காக ஏழு பேரையும் தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை. பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் போனில் 10 நிமிடங்கள் வரை பேசி அவருக்கு ஆறுதல் தெரிவித்தேன். அவர்களின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் தற்போது ஆளுநரிடம் இருக்கிறது. ஏழு பேரும் 27 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டனர். மனிதாபிமான முறையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து” என்று தெரிவித்தார்.
“பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. அப்படியெனில் பாஜக ஆபத்தான கட்சியா என்றும் என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய பதில். எதிர்க்கட்சிகள் அப்படி நினைக்கும்போது பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே” என்று விளக்கம் அளித்த ரஜினிகாந்த்,
என்னுடைய கருத்து திரிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் வீடியோ எடுக்கிறார்கள், அனைத்தும் பதிவாகிறது. திரித்துக் கூறினால் கண்டுபிடித்துவிடுவார்கள், அது நல்லதல்ல. பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். நான் தற்போது கருத்து கூற முடியாது. ஏனெனில் நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை. கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகள் அன்றாடம் நடந்துவருகின்றன” என்று குறிப்பிட்டார்.
மெகா கூட்டணி முயற்சி குறித்த கேள்விக்கு, “10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி. 10 பேரா அல்லது எதிர்த்து போராடும் ஒருவனா? நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்று பாஜகவை பலசாலி என்று சூசகமாகக் குறிப்பிட்ட ரஜினிகாந்திடம், அப்படியென்றால் மோடியை பலசாலி எனக் கூறுகிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதனை ஆமோதிக்கும் வகையில் சிரிப்பையே பதிலாகத் தந்தார் ரஜினி.
நடிகர்களுக்குக் குளிர்விட்டுப் போய்விட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனரே என்ற கேள்விக்கு, “அவர்கள் பொறுப்பான பதவியில் உள்ளனர். பேசும்போது யாரையும் புண்படுத்தாமல் கருத்துக்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று பதிலளித்தார்.
தமிழிசை கருத்து
முன்னதாக ரஜினிகாந்த் நேற்று தெரிவித்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “எழுவர் விடுதலை, பாஜக தொடர்பான கேள்விகளை ரஜினிகாந்த் உள்வாங்கியதுபோல தெரியவில்லை. முழுவதும் உள்வாங்கிக்கொண்டு சொன்ன பதிலாகவும் அது எனக்குத் தெரியவில்லை. இந்த கேள்விகளை மீண்டும் அவரிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அப்படிக் கேட்டால்தான் அவர் பொறுமையாக பதில் சொல்வதற்கு சரியாக இருக்கும். அனைத்துக் கேள்விகளையும் அவரிடம் மீண்டும் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
“பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பாராட்டிப் பதிவிட்டவர் ரஜினிகாந்த்” என்று சுட்டிக்காட்டிய தமிழிசை, அமல்படுத்திய நடைமுறை சரியாக இருந்த காரணத்தால்தான் பொருளாதார மேம்பாடு தற்போது சரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நடைமுறையைச் செய்யவில்லையெனில் அது பதுக்கல்காரர்களுக்கு சாதகமாக முடிந்துவிடும்” என்றும் விளக்கம் அளித்தார்.

கருத்துகள் இல்லை: