புதன், 14 நவம்பர், 2018

கஜா புயலின் வேகம் அதிகரித்தது; நாளை மாலை கரையைக் கடக்கிறது: வானிலை ஆய்வு மையம்

tamilthehindu :கஜா புயலின்  வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 100 கி.மீ.வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:
“தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ.தூரத்திலும், நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரமாக 10 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது நாளை நவ.15 மாலை முதல் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக்கடக்கக்கூடும்.

இதன் காரணமாக நாளை கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்  பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஒரு சில நேரம் 100 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும்.
மேற்கண்ட பகுதிகளில் கரையைக் கடக்கும் நேரத்தில் பரவலாக மழைபெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். மீனவர்கள் 15-ம் தேதிவரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட மாவட்டங்கள் தவிர இதர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னைக்கு 490 கி.மீ. கிழக்கே உள்ளது. இதனால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மழை இருக்கும். அது மிதமான மழையாக இருக்கும்.
புயலின் வேகம் சற்று கூடி உள்ளது. தற்போது 10 கி.மீ. வேகமாக உள்ளது, அது கடக்கும் நிலையை ஒட்டி வேகம் கூடலாம். புயல் கரையைக் கடக்கும்போது புயலாகத்தான் கரையைக் கடக்கும். வலுவிழக்க வாய்ப்பு இல்லை.”
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: