திங்கள், 12 நவம்பர், 2018

கஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரில் காற்றுடன் மிகக் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

tamil.thehindu.com/ போத்திராஜ் : தமிழகத்தை  நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:
தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்குத் தள்ளப்படும். ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது. மேற்கு, தென்மேற்காகப் புயல் நகரும்போது வேகமாக நகரும். ஆதலால், 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடக்கும்.
பிரதீப் ஜான்
 கஜா புயல் எவ்வளவு வலிமையானது?
கடந்த 40 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தமிழகக் கடற்கரையை கடந்த புயலின் அழுத்தம் குறித்த விவரங்களைத் தந்துள்ளேன்.
1. 1978-ம் ஆண்டு இலங்கை புயல் 953 எம்.பி.(பிரஷர்)
2. 2000—ம் ஆண்டு கடலூர் புயல் 959 எம்.பி.
3. 1996-ம் ஆண்டு சென்னை புயல் 967 எம்.பி.
4. 1993-ம் ஆண்டு காரைக்கால் 968 எம்.பி.
5. 2011-ம் ஆண்டு தானே 969 எம்.பி.
6. 2000-ம் ஆண்டு இலங்கை புயல் 970 எம்.பி.
7. 1984ம் ஆண்டு கடலூர் புயல் 973 எம்.பி.
8. 2016ம் ஆண்டு வர்தா புயல் 975 எம்.பி.
9. 1984-ம் ஆண்டு ஹரிகோட்டா புயல் 975 எம்.பி.
ஆதலால், தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் ஆழ்ந்த புயலாக மட்டுமல்லாமல் கடும் புயலாகவும், கடல்பகுதியில் மிகக் கடும் புயலாகவும் இருக்கும். வடக்கு தமிழக கடற்பகுதியை நெருங்கும்போது காற்று தீவிரமாகும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க மாடல்கள் கூறுகின்றன. ஆனால், வரும் நாட்களில் அதன் தீவிரத்தன்மை தெரியவரும்.
ரெட்அலர்ட்
சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ரெட் அலர்ட் என்பது புயலோடு தொடர்புடையது. ஆதலால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். 24 மணிநேரத்தில் 200மிமீ மழையைப் பெய்துவிட்டு செல்லும்.
புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கேட்டி, கொடநாடு, கோத்தகிரி பகுதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியவை.
 சென்னையில் எப்படி இருக்கும்?
கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு இருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகையில் புயல் கரையைக் கடக்கும்போது பெய்த மழை அளவு தரப்பட்டுள்ளது.
1. 2015-ம் ஆண்டு நவம்பரில் புதுச்சேரியில் புயல் கரைகடந்த போது சென்னையில் ஒரேநாளில் 200மி.மீ மழை பதிவானது.
2. 2013-ம் ஆண்டு வில்மா புயலால் சென்னையில் 2 நாட்களில் 110மி.மீ மழை பெய்தது.
3. 2012-ம் ஆண்டு நிலம் புயலால் சென்னைக்கு 2 நாட்களில் 120 மி.மீ மழை கிடைத்தது.
4. 2011-ம் ஆண்டு தானே புயலால் கடலூர், சென்னையில் ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்தது.
5. 2008-ம் ஆண்டு நிஷா புயலால் காரைக்கால், சென்னையில் 4 நாட்களில் 400மி.மீ மழை பதிவானது.
இந்தப் புயல் அனைத்தும் தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மேற்குவடமேற்காக நகர்ந்து தமிழகம் நோக்கி வந்தது. 1996-ம் ஆண்டு புயல் மட்டும் வடமேற்கு வங்கக்கடலில் இருந்து மேற்குதென்மேற்கு நோக்கி வந்தது.
இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும்.சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம்தேதியில் இருந்து காற்றுவீசக்கூடும் ஆனால், பெரிய அளவுக்குப் பாதிப்பு இருக்காது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை
வடமேற்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கடற்கரைப்பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும். வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். கேரள மாநிலத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புண்டு ஆனால், கஜா புயலால் தென் மாவட்டங்களுக்குக் குறைவான மழையே கிடைக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நாளை முதல் வடதமிழக கடற்கரை முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிவரை கடல் மிகுந்த ஆவேசமாக இருக்கும். ஆதலால், 16-ம் தேதிவரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக் கடலுக்குள் சென்றபின் புயல் என்னாகும், எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுவரை 23 சதவீதமும், சென்னையில் 52 சதவீதமும் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த கஜா புயலால் நமக்கு நல்ல மழை கிடைக்கும். வேகமாகப் புயல் நகரும்போது, குறைந்தநேரத்தில் அதிகமான மழையைக் கொடுக்கும்.
இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: