வெள்ளி, 16 நவம்பர், 2018

காலியாகிறது டெல்லி ?காற்று மாசுபாட்டினால் 35 சதவீத மக்கள் வெளியேற விருப்பம்!

டெல்லியை விட்டு வெளியேற விருப்பம்!மின்னம்பலம்: காற்று மாசுபாட்டினால் 35 சதவிகித மக்கள் டெல்லியை விட்டு வெளியேற விரும்புவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் காற்றின் தரத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தாங்கள் இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சமூக ஒத்துழைப்புக்கான வலைப்பின்னல் தளமான லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு, ஓர் ஆய்வை நடத்தியது. அதில், 26 சதவிகித மக்கள், தாங்களாகவே காற்று சுத்திகரிப்புக் கருவிகள், முகமூடிகள் மற்றும் அதிக தாவரங்களை வாங்கித் தற்காத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களது எண்ணிக்கை சுமார் 12,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் குளிர்காலத்தில் டெல்லியை விட்டு வெளியேறுவது நல்லது என்று 12 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். “இந்த ஆண்டு காற்று தர குறியீடு அதிகபட்சமாக 999 ஆக உள்ளது. வேறு வழியில்லை டெல்லியில்தான் இருக்க வேண்டும், காற்று மாசுபாட்டைச் சமாளிக்கத்தான் வேண்டும்” என 27 சதவிகித்தினர் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவு
டெல்லியிலுள்ள தரம் குறைந்த காற்றைச் சுவாசிப்பதால் தாங்கள் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்படுவதாக, இந்த ஆய்வில் பங்கேற்ற 57 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவர்களை அணுகவில்லை. 13 சதவிகிதத்தினருக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. குடும்பத்திலுள்ள ஒரு நபர் மருத்துவரைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக, 23 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். காற்று சுத்திகரிப்புக் கருவியைப் பெரும்பாலானவர்களால் வாங்க முடியவில்லை. ஒன்றின் விலை ரூ.10,000 முதல் 25,000 வரை விற்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு, முகமூடிகளை வாங்குவது கூட சிரமமாகவுள்ளது.
காற்று மாசுபாட்டிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தங்களிடம் காற்று சுத்திகரிப்புக் கருவி அல்லது முகமூடி இல்லை என 56 சதவிகிதத்தினர் கூறுகின்றனர். 21 சதவிகிதம் பேரிடம், இரண்டுமே உள்ளன. 15 சதவிகிதத்தினர் முகமூடிகளையும், 8 சதவிகிதத்தினர் காற்று சுத்திகரிப்புக் கருவியையும் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: