சனி, 17 நவம்பர், 2018

இலங்கை .. சர்வதேச நெருக்கடிகள் சிறி சேனாவை நோக்கி ?

சிறிசேனாவை நெருக்கும் சர்வதேசம்!மின்னம்பலம்: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 16) நடந்த சம்பவங்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா வந்தபோது அவரைச் சுற்றி சங்கிலி வளையம் அமைத்தபடி போலீசார் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் போலீஸாரையும் சபாநாயகரையும் நோக்கி நாற்காலிகளை வீசினர். பின் மிளகாய் பொடி கரைத்த தண்ணீரை வீசியடித்து நிலைகுலையச் செய்தனர். இந்தக் காட்சிகள் அல்ஜசீரா, பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் வீடியோக் காட்சிகளாக வெளியாகி கடுமையான விமர்சனங்களை அதிபர் சிறிசேனா மீது ஏற்படுத்தி வருகின்றன.
நேற்று முன் தினம் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு ஜனநாயகத்துக்கு இது கெட்ட நாள் என்று ஜெர்மனி தெரிவித்திருந்தது. நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்துக்கு இங்கிலாந்து தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது.

இலங்கைக்கான இங்கிலாந்து ஹை கமிஷனர் ஜேம்ஸ் டேரிஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இலங்கை வாக்காளர்கள் தங்களுக்குத் தேவையான முக்கியமான பணிகளைச் செய்வதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்தில் நடக்கும் மோசமான செயல்பாடுகள் இதுவரை இல்லாத வகையில் அமைந்துள்ளன. இப்படியான செயல்பாடுகள் தொடர்ந்தால் நாடாளுமன்றமே செயல்படாத நிலையே ஏற்படும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக் கிழமை லண்டன் கார்டியன் பத்திரிகை வெளியிட்ட தலையங்கத்தில், “இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேசம் செய்யும் தலையீடுகளால் அதிபர் சிறிசேனா திணறிப்போயிருக்கிறார். சர்வதேசத்தின் இந்தத் தலையீடு தொடர வேண்டும்” என்று கூறியிருக்கிறது.
மேலும் அந்தத் தலையங்கத்தில், “ இலங்கை நாடாளுமன்றத்தில் நடக்கும் மோதல்கள் நாட்டில் பரவக் கூடும் என்றும் அப்போது ராணுவம் தலையிடக் கூடுமென்றும் சிலர் அச்சம் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தை ஜனநாயக ரீதியாக அணுக வேண்டுமென்று படைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அதிபரும், அவரால் நியமிக்கப்பட்ட பிரதமரும் ஆளமுடியாமல் போவதால் ஒரு பொதுத் தேர்தலை திட்டமிட்டு திணிப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று சொல்கிறார்கள். மேலும் ராஜபக் ஷே இப்போது தனக்கு இருக்கும் பிரதமர் பதவியைப் பயன்படுத்தி அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்து மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் பலர் நினைக்கிறார்கள்.
இந்நிலையில் சீனாவைத் தவிர சர்வதேசத்தின் இலங்கை மீதான அழுத்தம் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டும்” என்றும் லண்டன் கார்டியன் அதிர்ச்சித் தகவலோடு தலையங்கம் தீட்டியிருக்கிறது.
நேற்று இரவு கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களை சந்தித்த ரனில் விக்ர்மசிங்கே, “ எங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது. ராஜபக்‌ஷே இருமுறை பெரும்பான்மையை இழந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகப்படி நாங்கள் வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: