வியாழன், 15 நவம்பர், 2018

டெல்லி .டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு

டி.எம் கிருஷ்ணா: இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு!மின்னம்பலம் ;டில்லியில் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி டில்லி சாணக்யாபுரியில் உள்ள நேரு பார்க்கில் நவம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்தது. ‘டேன்ஸ் அன்ட் மியூசிக் இன் தி பார்க்’ என்ற இந்த நிகழ்ச்சியை இரு நாள்கள் நடத்த விமான நிலையங்கள் ஆணையமும் (AAI), ஸ்பிக் மெக்கே (SPIC-MACAY) நிறுவனமும் திட்டமிட்டிருந்தன.
டி.எம்.கிருஷ்ணா கிறிஸ்தவ பாசுரங்கள், பாடல்களை கர்னாடக இசையில் பாடுவதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரை ‘ஆன்டி இந்தியன்’,‘அர்பன் நக்சல்’ என்ற பெயரில் இந்துத்துவ அமைப்பினர் விமர்சித்துவருகின்றனர். அவர்களின் எதிர்ப்பால் டில்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து டி.எம்.கிருஷ்ணா இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நவம்பர் 17ஆம் தேதி டில்லியில் எங்கு இடம் அளித்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். இத்தகைய அச்சுறுத்தல்களால் நாம் பதற்றப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி கர்னாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.அருணின் ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து டி.எம்.கிருஷ்ணா கர்னாடக இசையில் ஒவ்வொரு மாதமும் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடல்களைத் தொடர்ந்து பாடுவேன் என்று கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை: