ஞாயிறு, 11 நவம்பர், 2018

தருமபுரி மாணவி சௌமியா பாலியல் கொலை... குற்றவாளிகள் கள்ளசாராய வியாபாரிகள்

தருமபுரி மாணவி வன்கொடுமை : தலைவர்கள் கண்டனம்!மின்னம்பலம்: தருமபுரி மாணவி உயிரிழப்புக்குத் தமிழக அரசே பொறுப்பேற்று, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்த அண்ணாமலை (43), மலர்(40). தம்பதியினரின் மகள் சவுமியா(17), இவர் விடுதியில் தங்கி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக கடந்த 5ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த மாணவி, அன்று மாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இருவரும், மாணவியைப் பின் தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக மாணவி உயிரிழந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
இந்தச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தருமபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை. இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும். பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி
அதுபோன்று மாணவி உயிரிழந்ததற்கு, சம்பந்தப்பட்ட கயவர்கள் மட்டுமின்றி காவல்துறையும், அரசு நிர்வாகமும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும். என்று கூறியுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, ”பாதிக்கப்பட்ட மாணவிக்கு எந்தவிதமான மருத்துவமும் வழங்காமல், வழக்குப் பதிவு செய்து தருமபுரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர், அத்துடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக் கொண்டனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறை மேற்கொள்ளவில்லை”. என்று குற்றம்சாட்டியுள்ளார்.
”இந்தக் கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆகியும் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இரு குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷின் தாயார் அப்பகுதியில் அரசு மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், இதற்காகக் கோட்டைப்பட்டி காவல்துறையினருக்கு லஞ்சம் தருவதாகவும், அதனால் தான் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்புகார் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
”மாணவியின் இல்லத்தில் பயன்படுத்தத் தக்க வகையில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் அம்மாணவிக்கு இத்தகையக் கொடுமை நிகழ்ந்திருக்காது. மலைவாழ் மக்களுக்குக் கழிப்பறை வசதிகளைக் கட்டித்தருவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அத்திட்டங்களை செயல்படுத்தித் தராததும் இதற்குக் காரணம் ஆகும். அந்த வகையில் மாணவியின் மரணத்துக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். . மேலும், ”இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை
”அரூர் மாணவி கழிப்பிடம் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்குப்பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த நிகழ்ச்சி கண்டனத்துக்குரியது தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும். வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும்" என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: